Posted in

சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா பரபரப்பு புகார்: மோசடி விவகாரத்தால் சினிமா வட்டாரத்தில் அதிரடி!

தமிழ் திரையுலகின் முன்னணி மூத்த நடிகைகளான சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையே நிலவி வந்த குடும்பப் பிரச்சினை, தற்போது ₹46 கோடி செக் மோசடி குற்றச்சாட்டாக உருவெடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தை எட்டியுள்ளது. தனது சகோதரியான நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் ஆகியோர் இணைந்து தனக்குச் சொந்தமான 5 காசோலைகளைத் திருடி ரூ.46 கோடி அளவில் மோசடி செய்துவிட்டதாக நடிகை ராதா நேரடியாகக் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிர்ச்சி புகார் அளித்துள்ளார்.

நடிகை ராதா தனது குடும்பத்தினருடன் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த சூழலில், அவரது அறைக்குள் நுழைந்து கையெழுத்திடப்பட்ட பழைய காசோலைகள் (Cheques), தங்கம் மற்றும் வைர நகைகள், சொத்து ஆவணங்களை அம்பிகாவும் சகோதரர் அர்ஜுன் நாயரும் திருடிச் சென்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தனது வங்கிச் கணக்கைப் பரிசோதனை செய்தபோதே, தனக்கே தெரியாமல் சுமார் 5 காசோலைகள் மூலம் ₹46 கோடி தொகையை நிரப்பிப் பணமாக்க முயற்சி நடந்திருப்பது தெரியவந்ததாக ராதா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இரு சகோதரிகளுக்கும் இடையே ஏ.ஆர்.எஸ். கார்டன் சொத்துப் பங்கீடு மற்றும் தாய் மறைவுக்குப் பிறகு வந்த நில விற்பனை குறித்துக் கருத்து வேறுபாடுகளும் மனக்கசப்புகளும் நீடித்து வந்தன. இந்நிலையில்தான், தன் அனுமதியின்றி செக்குகளைத் திருடி, போலியாகத் தொகையை நிரப்பி ஏமாற்ற முயன்ற அக்கா அம்பிகா நாயர் மற்றும் சகோதரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ராதா மனு அளித்துள்ளார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை வழங்கிவிட்டு வெளியேறிய நடிகை ராதா, விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து முழு விவரங்களையும் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 80-களின் தென்இந்தியத் திரையுலகைக் கொடிகட்டிப் பறந்த பிரபல சகோதரிகளுக்கு இடையே ரூ.46 கோடி மோசடி புகார் வெடித்துள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.