Posted in

அண்ணன் சீர் செய்யவே முடியாது. ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ. 1.28 லட்சம் கடன்!

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாநிலத்தின் கடன் சுமை மற்றும் அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது, “ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ. 1.28 லட்சம் கடன் சுமை நிலுவையில் உள்ளது” என்றும், அரைகுறை நிதியைக் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ரகுபதி கடுமையாகச் சாடியுள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, அரசின் தற்போதைய நிதி நிலைமை அரைகுறையாக உள்ளதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக ‘அண்ணன் சீர்’ திட்டத்திற்காக ரூ. 832 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்திட்டத்தில் பயன்பெற 2 முதல் 3 லட்சம் பெண்கள் முன்வருவார்கள் என்றும், தற்போதைய தங்கம் மற்றும் புடவைகளின் விண்ணை முட்டும் விலை உயர்வுக்கு ஏற்ப இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தக் குறைந்தது 2,000 கோடி ரூபாய் தேவைப்படும் என்றும் கூறினார். தற்போதைய ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு இத்திட்டத்தைச் சீராகச் செயல்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மாநில அரசின் நிதி மேலாண்மை தோல்வியால் தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் கடன் சுமை ஏறியுள்ளதை நினைவூட்டிய அவர், 2020-21-ல் ரூ. 67,087 ஆக இருந்த தனிநபர் கடன் தொகை தற்போது ரூ. 1,28,934 ஆக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். மகளிர் உரிமைத் தொகை மற்றும் இலவச விடியல் பயணத் திட்டங்கள் மூலம் மக்கள் மனதில் தங்கள் ஆட்சி நீங்காத இடம் பெற்றுள்ளதாகக் கூறிய அவர், தற்போதைய ஆட்சியாளர்களின் திட்டமிடல் இல்லாத அறிவிப்புகள் மாநிலத்தின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும் என எச்சரித்தார்.

ரகுபதியின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அரசின் திட்டங்கள் அனைத்தும் நிதி ஆதாரங்களைச் சரியாகக் கணக்கிட்டே செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். மேலும், கடந்த காலங்களில் விட்டுச் செல்லப்பட்ட கடன் சுமையைச் சீரமைத்துக்கொண்டு, ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களைத் தடையின்றி வழங்கி வருவதாகவும் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தனர். இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற இந்த காரசாரமான விவாதம் சட்டமன்றத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.