Posted in

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு?அதிர்ச்சியில் மதுப் பிரியர்கள்!

தமிழ்நாட்டில் அரசுத்துறை நிறுவனமான டாஸ்மாக் (TASMAC) மூலம் இயங்கி வரும் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது மற்றும் பீர் வகைகளின் விலையை உயர்த்தத் தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த விலை உயர்வு தொடர்பான முன்மொழிவுகள் டாஸ்மாக் நிர்வாகக் குழுவுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது பரிசீலிக்கப்பட்டு வரும் திட்டத்தின்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள், இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் (IMFL) மற்றும் பீர் வகைகளின் விலை பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும், பசுமை மற்றும் சமூக நல நிதி நடவடிக்கைகளுக்காக மது பாட்டில்கள் மீது தனியாக கூடுதல் கட்டணம் விதிக்க சட்ட முன்வடிவும் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதால் விலை உயர்வு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் தங்களின் உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதைக் சுட்டிக்காட்டி, சில்லறை விற்பனை விலையை உயர்த்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதேபோல, சமீபத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டவும் இந்த விலை சீரமைப்புத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் மீண்டும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது. நாளொன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடி வரை வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் நிறுவனத்தின் இந்த புதிய விலை உயர்வு அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.