Posted in

பிரேசிலில் ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்து! – சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலி!

பிரேசிலின் புகழ்பெற்ற ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள தீஜூகா தேசியப் பூங்கா (Tijuca National Park) அடர்ந்த வனப்பகுதியில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று திடீரென நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சோகச் சம்பவத்தில் ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்ற பிரேசில் நாட்டைச் சேர்ந்த விமானி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 கொலம்பியச் சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்த கொலம்பிய நாட்டைச் சேர்ந்த 3 பெண்களும், தங்களது குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் 15-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ரியோ டி ஜெனிரோ நகருக்குச் சுற்றுலா வந்திருந்தனர். ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் 3 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், 6 பேர் கொண்ட அக்குடும்பம் இரண்டு குழுக்களாகப் பிரிந்தது. இதில் முதற்கட்டமாகப் பயணித்த பிறந்தநாள் சிறுமியின் பாட்டி, அத்தை மற்றும் அத்தை மகள் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், அடுத்த விமானத்தில் பயணிக்க இருந்த சிறுமியும் அவரது தந்தையும் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.

அடர்ந்த மலைக் காட்டுப் பகுதியான ‘விஸ்டா சைனீசா’ (Vista Chinesa) பகுதி அருகே ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தான மலையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், அடர்ந்த மரங்கள் மற்றும் கடினமான பாதை காரணமாக விபத்து நடந்த இடத்தை அடைவதிலும், தீயைக் கட்டுப்படுத்தி உடல்களை மீட்பதிலும் கடும் போராட்டத்தைச் சந்தித்தனர்.

ரியோ டி ஜெனிரோவில் நகர அழகைக் வான்வழியாகக் கண்டு ரசிக்கும் ஹெலிகாப்டர் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களில் நடக்கும் இரண்டாவது பெரிய ஹெலிகாப்டர் விபத்து இது என்பதால், விமானப் பயணங்களின் பாதுகாப்பைக் பலப்படுத்தவும், கண்காணிப்பை உடனடியாகத் தீவிரப்படுத்தவும் பிரேசிலின் தேசிய சிவில் விமானப் போக்குவரத்து முகமைக்கு (ANAC) ரியோ நகர் மேயர் எடுவார்டோ காவாலியே (Eduardo Cavaliere) வலியுறுத்தியுள்ளார்.