பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகளால் அரச குடும்பப் பட்டங்கள் மற்றும் ராணுவப் பொறுப்புகள் அனைத்தையும் இழந்து சாதாரணக் குடிமகனாக மாற்றப்பட்ட பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் விண்ட்சருக்கு (Andrew Mountbatten-Windsor), அவரது மறைவுக்குப் பின் உயர்நிலை அரச மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு (Royal Ceremonial Funeral) நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் ரகசிய விவரங்கள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பிரிட்டன் அமைச்சரவை அலுவலகத்தின் (Cabinet Office) ரகசிய ‘பிரிட்ஜ்’ (Bridge) திட்டப் பட்டியலில், ஆண்ட்ரூவின் பெயர் இன்னமும் இடம்பெற்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு ‘ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்ற பெயரில் இறுதிச்சடங்குகள் திட்டமிடப்பட்டது போல, அரச குடும்பத்து உறுப்பினர்களுக்கான இறுதிச்சடங்கு வரைவுத் திட்டங்கள் முன்கூட்டியே தயாரிக்கப்படும். இதன்படி, 66 வயதாகும் ஆண்ட்ரூ இயற்கை எய்தும் போது, வின்ட்சரில் உள்ள அரச குடும்பத்திற்குரிய பிரத்யேக மயானத்தில் (Frogmore Royal Burial Ground) அவர் அடக்கம் செய்யப்படுவார் என அந்த அறிக்கைகள் கூறுகின்றன.
அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட ஒருவருக்கு அரச மரியாதை அளிக்கும் இந்த ரகசியத் திட்டம், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சர்வதேச வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்ஸ்டீன் பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான அமெரிக்கப் புகழ்பெற்ற வழக்கறிஞர் குளோரியா ஆல்ரெட் பேசுகையில், “பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெரும் அவமானத்தைத் தேடித்தந்த ஒருவருக்கு எதற்காக இத்தகைய உயரிய அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டும்? இது பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்” எனக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பிரிட்டிஷ் எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் நிதி வல்லுநர்களும் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆண்ட்ரூ இப்போது சாதாரண குடிமகனாக இருப்பதால் அவருக்கு எவ்வித அரச இறுதிச்சடங்கும் வழங்கக் கூடாது என்றும், இந்தத் திட்டங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே மக்களின் வரிப்பணத்தில் அவரது பராமரிப்புச் செலவுகள் குறித்து விவாதங்கள் நிலவி வரும் சூழலில், இந்த புதிய செய்தி இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மீண்டும் ஒரு பெரிய நெறிமுறைச் சிக்கலை உருவாக்கியுள்ளது.