அமெரிக்காவில் எச்-1பி (H-1B) உள்ளிட்ட தொழில்முறை விசாக்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் வேலை இழக்கும் பட்சத்தில், அவர்கள் வேறு வேலை தேட வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகைக் காலத்தை (Grace Period) முழுமையாக ரத்து செய்ய அமெரிக்கப் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்த புதிய முன்மொழிவு வெளிநாட்டுப் பணியாளர்கள், குறிப்பாக இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை (IT) வல்லுநர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, எச்-1பி விசா வைத்திருப்பவர் பணியில் இருந்து நீக்கப்பட்டால், அவர் அமெரிக்காவில் தங்கி மற்றொரு நிறுவனத்தில் வேலை தேடவோ அல்லது வேறு விசா பிரிவுக்கு மாறவோ 60 நாட்கள் வரை சட்டப்பூர்வ அவகாசம் வழங்கப்படுகிறது. ஆனால், பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய விதியின்படி இந்த 60 நாட்கள் அவகாசம் ரத்து செய்யப்பட்டால், வேலை இழந்த வெளிநாட்டு ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் எவ்விதக் கூடுதல் கால அவகாசமும் இன்றி உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அமெரிக்காவில் எச்-1பி விசா பெறுபவர்களில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பதால், இந்த விதிமுறை மாற்றம் அமலுக்கு வந்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படப் போவது இந்தியக் குடும்பங்களே ஆகும். வேலை இழப்பு ஏற்படும் சூழலில், புதிய ஸ்பான்சர்ஷிப் நிறுவனத்தைக் கண்டுபிடித்து விசா மாற்றத்திற்கான மனுவை தாக்கல் செய்வது சில வாரங்கள் பிடிக்கும் என்பதால், இந்த அவகாசத்தை நீக்குவது சட்டப்பூர்வமாகப் பணியாற்றி வரும் ஊழியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் என மனிதவள அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
இருப்பினும், இந்த புதிய யோசனை தற்போது முன்மொழிவு நிலையில் மட்டுமே உள்ளது என்றும், இது வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவு திட்ட அலுவலகத்தின் (OMB) பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. OMB ஒப்புதலுக்குப் பிறகு, ஃபெடரல் பதிவேட்டில் (Federal Register) வெளியாகி 30 முதல் 60 நாட்கள் பொதுமக்கள் கருத்துக் கேட்புப் பணிகளுக்குப் பிறகே இறுதி முடிவாக வடிவெடுக்கும் என்பதால், விசா வைத்திருப்பவர்கள் உடனடியாக அச்சப்படத் தேவையில்லை என குடிவரவு சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.