Posted in

காதலியை இறக்கிவிட வந்த 25 வயது இளைஞர் சுட்டுக்கொலை, லண்டனில் பெரும் அதிர்ச்சி!

லண்டனின் தென் பகுதியிலுள்ள கிளாப்ஹாம் (Clapham) பகுதியில் அமைந்துள்ள ‘லேண்டர்’ (The Landor) பப் அருகே, தனது காதலியை காரில் இறக்கிவிட வந்த 25 வயது இளைஞர் துப்பாக்கியால் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 10 திங்கட்கிழமை இரவு சுமார் 9:55 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து, லண்டன் மாநகரக் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தன்று இரவு சடசடவென 4 முறை வெடிச்சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கும் உள்ளூர்வாசிகள், ஆரம்பத்தில் அதை பட்டாசு வெடிக்கும் சத்தம் என நினைத்ததாகக் கூறுகின்றனர். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் பப்-இல் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்த நபர்கள் “காவல்துறைக்கு போன் செய்யுங்கள்” எனக் கத்திய பிறகே, அங்குத் துப்பாக்கிச் சூடு நடந்தது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் மற்றும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் தீவிர முயற்சி செய்தபோதிலும், ரத்த வெள்ளத்தில் கிடந்த 25 வயது இளைஞரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே, துப்பாக்கிக் காயத்துடன் 22 வயது இளைஞர் ஒருவர் லண்டனில் உள்ள உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இக்கொலைச் சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அந்த 22 வயது இளைஞரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறைக்காவலில் வைத்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து காரும், ஒரு இருசக்கர வாகனமும் வேகமாகத் தப்பிச் சென்றதை நேரில் பார்த்ததாகச் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

லண்டனின் கிளாப்ஹாம் வில்லிங்டன் சாலையில் தடுப்புகளை அமைத்து தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளையும், பொதுமக்கள் தாமாக முன்வந்து வழங்கும் தகவல்களையும் சேகரித்து வரும் லண்டன் மெட் பாலிட்டன் காவல்துறையினர், இந்த படுகொலைக்கான உண்மையான பின்னணி என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.