Posted in

உணவு டிரக் பெட்டிக்குள் இரகசியமாக ஏறிய டிரம்ப்! – பாதுகாப்பு காரணங்களால் நடுவானில் விமானம் மாற்றப்பட்ட பரபரப்பு வீடியோ!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பியபோது, ஈரான் ஆதரவு அமைப்புகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய உணவு விநியோக வாகனத்திற்குள் (Catering Truck Container) இரகசியமாக மறைந்து சென்று சிறிய ரக ராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. இந்த இரகசிய நடவடிக்கை தொடர்பான வீடியோ காட்சிகளை வலதுசாரி அரசியல் ஆர்வலரான லாரா லூமர் (Laura Loomer) வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மாதம் துருக்கியின் அங்காரா நகரத்தில் நேட்டோ மாநாடு நடைபெற்றது. மாநாடு முடிந்ததும் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு அதிபரின் அதிகாரப்பூர்வ ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) பெரிய விமானத்தில் டிரம்ப் ஏறுவது போல் காட்டப்பட்டது. ஆனால், அவர் விமானத்தினுள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பிரத்யேகக் கொள்கலன் வாகனத்தில் இரகசியமாக ஏற்றப்பட்டு, அங்கிருந்த சிறிய ரக C-32A ராணுவ விமானத்திற்குப் பாதுகாப்பாக மாற்றப்பட்டார்.

ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற அமைப்புகளிடமிருந்து டிரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்தே இந்தத் தந்திரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் டிரம்ப் பழைய விமானத்திலேயே பயணிப்பதாக எதிரிகள் நினைக்க வேண்டும் என்பதற்காக, விமானத்தில் இருந்த செய்தியாளர்களின் ஜன்னல் திரைகளும் மூடப்பட்ட நிலையில், டிரம்ப் சிறிய விமானம் மூலம் இங்கிலாந்து சென்று அங்கிருந்து வாஷிங்டன் திரும்பினார்.

இந்தச் சம்பவம் குறித்து ட்ரூத் சோஷியல் மற்றும் எக்ஸ் தளங்களில் கருத்து தெரிவித்துள்ள லாரா லூமர், அதிபரின் பாதுகாப்பை உறுதி செய்ய உளவுத்துறை எடுத்த இந்த நடவடிக்கை மிகவும் சாதுரியமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அமெரிக்க அதிபர் ஒருவர் சர்வதேசப் பயணத்தின் போது கேட்டரிங் வாகனம் மூலம் இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வு, உலக அரசியல் அரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.