பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சொத்து வரி மறுமதிப்பீடு மற்றும் உயர்த்தப்பட்ட வரி அறிவிப்புகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் அறிவித்துள்ளார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளைக் கவனமாகப் பரிசீலித்த பின்னர் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்களைக் கண்டறிந்து சொத்து வரியை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி அண்மையில் மேற்கொண்டது. இதற்காகச் சுமார் 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்குப் புதிய வரி மதிப்பீட்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இருப்பினும், இந்த வரி உயர்வால் தங்களுக்குக் கடுமையான நிதிச்சுமை ஏற்படுவதாகக் கூறி, வரி மாற்றியமைப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாநகராட்சிக்கு ஏராளமான மனுக்களும் கோரிக்கைகளும் வந்தவண்ணம் இருந்தன.
இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சொத்து வரி மாற்றியமைப்பு நடவடிக்கை உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், பழைய நடைமுறையில் இருந்த வரித் தொகையே மீண்டும் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்த்தப்பட்ட புதிய கட்டணத்தை ஏற்கனவே செலுத்திய உரிமையாளர்களுக்கு, அத்தொகையானது அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பண வரியாக (Advance Tax) சரிசெய்யப்படும் (Adjust) என மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுமட்டுமன்றி, சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படைச் தெரு வரி விகிதத்தைக் (Basic Street Rate) குறைப்பது குறித்தும் தனியாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த உடனடி நடவடிக்கையால் நீண்ட நாட்களாகக் கவலையில் இருந்த சென்னை சொத்து உரிமையாளர்களும் பொதுமக்களும் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.