Posted in

வானில் இருந்து கொட்டிய சாம்பல் மழை! – 6 தீயணைப்பு வீரர்கள் உட்பட 25 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பிரிட்டனின் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் (West Midlands) பகுதியில் வீசிய கடும் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாகப் பரவிய காட்டுத்தீ, குடியிருப்புகளை நோக்கி அதிவேகமாகப் பரவி பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நரகத்தை நினைவூட்டும் வகையில் பயங்கரமாகப் பரவிய இத்தீயினால் பல வீடுகள் எரிந்து முற்றிலும் சாம்பலாகியுள்ளன. புகை மூட்டம் மற்றும் கடுமையான தீக்காயங்கள் காரணமாக 6 தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 25 பேர் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காட்டுத்தீயின் கொடூர தாக்கம் குறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், “வானத்திலிருந்து சாம்பல் மழை பொழிந்தது போல் இருந்தது, சுற்றிலும் பயங்கர புகைமூட்டம் சூழ்ந்தது” எனத் தங்களது கொடூர அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர். தீ மிகவேகமாக குடியிருப்புப் பகுதிகளுக்குப் பரவியதால், மக்கள் தங்களது உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோடினர். அப்பகுதி முழுவதையும் நச்சுப் புகை சூழ்ந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

கட்டுக்கடங்காமல் எரியும் தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் அவசர மீட்புக் குழுவினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது அதிகளவிலான அடர் புகையைச் சுவாசித்ததால் 6 தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் நிலவும் 38 டிகிரி செல்சியஸைக் கடந்த வரலாறு காணாத கடும் வெப்ப அலை மற்றும் வறட்சியே இந்தத் தீ அனர்த்தத்திற்கு முதன்மைக் காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது.

இந்த அசாதாரண சூழலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் திறந்தவெளிப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், காட்டுத்தீ ஆபத்தைக் குறைக்கக் திறந்தவெளி பார்பிக்யூ உபகரணங்கள் பயன்பாட்டிற்குப் பிரிட்டன் அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.