சீனத் தலைநகர் பீஜிங்கில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரை நோக்கி 230-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த ஹைனான் ஏர்லைன்ஸ் (Hainan Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் A330-300 பயணிகள் விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. சைபீரிய வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பச் சிக்கலைத் தொடர்ந்து, விமானி உடனடியாக அவசர எச்சரிக்கை நிலையைப் பிரகடனப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சைபீரிய பிராந்தியத்தில் உள்ள கிராஸ்நோயார்ஸ்க் (Krasnoyarsk) சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கத் தீர்மானிக்கப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், ரஷ்ய அவசரகால மீட்புப் படை வீரர்கள், 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் ஓடுபாதையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு, விமான நிலையம் முழு அவசரக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
பலமுறை வான்வெளியில் வட்டமடித்த பின்னரும், விமானியின் சாதுரியமான நடவடிக்கையால் அந்த விமானம் கிராஸ்நோயார்ஸ்க் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இந்த விபத்துத் தவிர்க்கப்பட்ட சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் ஊழியர்கள் உட்பட அனைவரும் எவ்வித காயங்களுமின்றி நலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போர்க் காரணம் காரணமாக இங்கிலாந்து மற்றும் ரஷ்யா இடையே நேரடி உறவுகள் சுமுகமாக இல்லாத சூழலில், இங்கிலாந்து நோக்கிச் சென்ற விமானம் ரஷ்ய மண்ணில் தரையிறங்கியது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. சிக்கித் தவிக்கும் பயணிகளை மான்செஸ்டர் கொண்டு சேர்க்க மாற்று விமானத்தை அனுப்பும் முயற்சியில் விமான நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.