முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய சர்ச்சை கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த மாநில துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் இதற்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, முதலமைச்சரின் தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் தெரிவித்த தரக்குறைவான கருத்து அருவருப்பானது என்றும், எந்தவொரு அரசியல் தளத்திலும் இத்தகைய தனிப்பட்ட விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். சொந்தக் கட்சியின் மூத்த நிர்வாகியே மாநிலத் தலைவரின் பேச்சைக் கண்டித்துள்ளது பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பெண்களுக்கு முன்னுரிமையும் மரியாதையும் அளித்து வரும் சூழலில், இத்தகைய பேச்சுக்கள் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். “அரசியல் விளையாட்டுகளில் பெண்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தக் கூடாது” என்றும், எந்தவொரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசுவதற்கு முன்பும் ஒவ்வொரு ஆணும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே நயினார் நாகேந்திரனின் இந்த எல்லை மீறிய பேச்சுக்கு அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், குஷ்புவின் இந்த பகிரங்கக் கண்டனம் பாஜகவை மேலும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அரசியல் நாகரிகத்தைக் காக்கவும், பெண்களின் கண்ணியத்தைப் பேணவும் தலைவர்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.