Posted in

நெதன்யாகுவின் மூத்த சகோதரர்: உகாண்டாவில் பிரம்மாண்ட சிலை திறந்து கவுரவம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த சகோதரரான லெப்டினன்ட் கர்னல் யோனாதன் “யோனி” நெதன்யாகுவின் நினைவாக, உகாண்டா நாட்டின் என்டபே சர்வதேச விமான நிலையத்தில் பிரம்மாண்ட நினைவுச்சின்னம் மற்றும் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 1976-ஆம் ஆண்டு உகாண்டாவின் என்டபே நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற விமானப் பிணைக்கைதிகள் மீட்புப் போராட்டத்தின் போது உயிரிழந்த யோனாதன் நெதன்யாகுவின் வீரத்தைப் போற்றும் வகையில் உகாண்டா ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உகாண்டா ராணுவத் தளபதியான ஜெனரல் முஹூசி கைனெருகாபா இந்த வெண்கலச் சிலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். நிகழ்வில் பேசிய அவர், “இந்த நினைவுச்சின்னம் ஒரு சிறந்த ராணுவ வீரரை நினைவுகூர்வதுடன் மட்டுமல்லாமல், ஆபத்தான தருணங்களில் காட்டிய தைரியம், அப்பாவி உயிர்களைப் பாதுகாப்பதில் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் கடமையுணர்வு ஆகியவற்றின் அடையாளமாக நிற்கிறது” எனப் புகழாரம் சூட்டினார். இந்த விழாவில் இஸ்ரேலியப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

1976-ஆம் ஆண்டு பாலஸ்தீன மற்றும் ஜெர்மன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு என்டபே விமான நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் கமாண்டோ படை அதிரடித் தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் என்டபே’ என அழைக்கப்படும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மீட்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய யோனாதன் நெதன்யாகு, தாக்குதலின் போது துப்பாக்கிக் சூட்டில் பலியான ஒரே இஸ்ரேலியக் கமாண்டோ வீரர் ஆவார்.

அன்றைய காலகட்டத்தில் உகாண்டாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி இதி அமீன் இஸ்ரேலுக்கு எதிரான நிலையை எடுத்திருந்த போதிலும், தற்போதைய உகாண்டா அரசு இஸ்ரேலுடனான பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த சிலையை அமைத்துள்ளது. 50 ஆண்டுகளை நெருங்கும் இச்சம்பவத்தின் நினைவாக திறக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, உகாண்டா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான வளர்ந்து வரும் நட்புறவின் முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.