சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசுவது போன்று செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி டீப்ஃபேக் (Deepfake) வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்களை ஏமாற்றிப் பண மோசடி செய்யும் நோக்கில் இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தமிழகக் காவல்துறையின் சிபிசிஐடி (CB-CID) சைபர் கிரைம் பிரிவு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
வழக்கமான இணையதளக் கண்காணிப்பின் போது கண்டறியப்பட்ட இந்த வீடியோவில், முதலமைச்சர் விஜய் இந்தி மொழியில் பேசுவது போன்று ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது. அதில், ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி மற்றும் கல்விக் கடன்கள் வழங்கப்படுவதாகவும், உதவி தேவைப்படுவோர் உடனடியாகக் குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த போலி வீடியோக்கள் ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தளப் பக்கங்களில் வேகமாகப் பரப்பப்பட்டு வந்தன.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இத்தகைய போலி ஏ.ஐ. வீடியோக்கள் பல பாகிஸ்தானைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய ஃபேஸ்புக் ஐடிகளிலிருந்து (Facebook IDs) பதிவேற்றம் செய்யப்பட்டுப் பரப்பப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்தப் போலி கணக்குகளின் விவரங்கள் மற்றும் ஐபி லாக் தகவல்களைப் பெறுவதற்காக மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சைபர் கிரைம் போலீசார் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் இதுபோன்ற போலி வீடியோக்களையும் அவற்றில் குறிப்பிடப்படும் வாட்ஸ்அப் எண்களையும் அல்லது லிங்க்குகளையும் எக்காரணம் கொண்டும் தொடர்பு கொள்ள வேண்டாம் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது. முதலமைச்சர் அல்லது அரசு நிதி வழங்கத் தொடர்புகொள்ளக் கூறுவது போன்ற போலி ஆசை வார்த்தைகளை நம்பி வாட்ஸ்அப் குழுக்களில் இணையவோ அல்லது பணத்தை இழக்கவோ வேண்டாம் என்றும், இதுகுறித்துக் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தமிழகச் சைபர் கிரைம் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.