Posted in

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முந்தைய ஆட்சியின் போது தங்களின் வாழ்வாதார உரிமைக்காகவும், நியாயமான கோரிக்கைகளுக்காகவும் ஜனநாயக வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அனைத்துப் போலி வழக்குகளும் முழுமையாகத் திரும்பப் பெறப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் மற்றும் திருவண்ணாமலை சிப்காட் விரிவாக்கத் திட்டங்களுக்கு எதிராகத் தங்களின் விளைநிலங்களைப் பாதுகாக்க அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது பாயப்பட்ட வழக்குகள் அனைத்தும் மனிதநேய அடிப்படையில் ரத்து செய்யப்படுகின்றன என முதலமைச்சர் தெரிவித்தார். அதேபோல, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்திய ஆசிரியர் பெருமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்த அவர், “நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளையும், எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களையும் குற்றவாளிகளாக நடத்தியது கண்டிக்கத்தக்கது” எனச் சுட்டிக்காட்டினார்.
காவல்துறை சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீனக் கண்காணிப்பு அமைப்புகள் காவல்துறைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு ரோந்து வாகனங்கள், காவல் பணியில் உள்ள காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறப்பு நலத்திட்டங்கள் மற்றும் சிறைவாசிகளின் மறுவாழ்விற்கான தொழிற்பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை ‘பூஜ்ய நிலை’க்குக் கொண்டு வரக் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், தவறு இழைக்கும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சர் வெளியிட்ட இந்த மக்க நல அறிவிப்புகள், பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.