Posted in

ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய அஜித் – முதல்வர் விஜய்க்கு வெளிப்படையான பாராட்டு

தமிழ்நாட்டில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், பன்னாட்டுத் தரத்திலான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கிலும் ‘பிரத்யேக மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ (Motor Sports City) அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சமீபத்தில் அறிவித்தார். அரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவைப் பாராட்டி, முன்னணி நடிகரும் தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார், முதலமைச்சர் விஜய்க்குத் தனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் அதேவேளையில், ‘அஜித் குமார் ரேஸிங்’ (Ajith Kumar Racing) அணி மூலம் பன்னாட்டு கார் பந்தயங்களில் பங்கேற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார் அஜித். இந்நிலையில், தமிழக அரசின் புதிய அறிவிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்டுள்ள இந்தச் சிறிய முயற்சி, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்குக் கிடைத்த ஒரு மாபெரும் பாய்ச்சலாகும் (One giant leap for Indian motorsports)” என விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வாசகத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களைக் கண்டறிந்து, அவர்களை சர்வதேச அளவில் உயர்த்துவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, கார் மற்றும் பைக் பந்தயங்களுக்குத் தனி முக்கியத்துவம் அளித்து ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ உருவாக்கப்படுவது, பந்தயத் துறையில் ஆர்வமுள்ள இளம் வீரர்களுக்கு ஒரு மிகப்பெரிய தளத்தையும் நல்வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும் என விளையாட்டு ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

முதலமைச்சர் விஜய்யின் அனைத்து நல்முயற்சிகளும் பெரும் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தியுள்ள அஜித் குமார், இத்திட்டம் இந்திய அளவிலான கார் பந்தய வரலாற்றில் ஒரு முக்கியப் திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் இரு துருவங்களாகப் பார்க்கப்படும் விஜய் மற்றும் அஜித் இடையே பரஸ்பர மரியாதையும், விளையாட்டுத் துறை வளர்ச்சி சார்ந்த இந்த ஆதரவும் வெளிப்பட்டிருப்பது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.