மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் போர் விமானப் பராமரிப்பு மையங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ‘கேஸில் பிரேக்கர்’ (Castle Breaker) ரக அதிநவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரசீக மொழியில் ‘கைபர் ஷேகன்’ (Kheibar Shekan) என அழைக்கப்படும் இந்த ஏவுகணைகள், அமெரிக்க வான் பாதுகாப்பு மண்டலங்களை ஊடுருவித் தாக்கும் திறன் கொண்டவை ஆகும்.
ஈரானின் புரட்சிகரக் காவல் படையால் (IRGC) உருவாக்கப்பட்ட இந்த மூன்றாவது தலைமுறை ‘கேஸில் பிரேக்கர்’ ஏவுகணைகள், சுமார் 1,450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் நடுத்தரக் தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளாகும் (MRBM). திட எரிபொருளில் (Solid-fuel) இயங்கும் இவைகளை மிகக் குறைந்த நிமிடங்களில் தயார் செய்து ஏவ முடியும் என்பதால், எதிரி நாடுகளின் ரேடார்களாலும் வான் தற்காப்பு அமைப்புகளாலும் இவற்றை முன்கூட்டியே கண்டறிந்து அழிப்பது மிகவும் கடினம் என ராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜோர்டானின் அஸ்ராக் (Azraq) பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கப் படைகளின் ‘முவஃப்பாக் அல்-சால்டி’ மற்றும் மன்னர் ஹுசைன் விமானப் படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. வழக்கமான பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் போலன்றி, இலக்கை நெருங்கும் போது தங்களின் திசையை மாற்றிக்கொள்ளும் (Manoeuverable Warhead) சிறப்புத் தொழில்நுட்பம் இவற்றில் உள்ளதால், அமெரிக்காவின் அதிநவீன ‘பேட்ரியாட்’ (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாமல் போயுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் உள்ள ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே ஈரான் இந்த ‘கேஸில் பிரேக்கர்’ ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் ஆயுத பலம் பலவீனமடைந்துள்ளதாகத் தெரிவித்து வந்த நிலையில், இத்தகைய சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஏவி அமெரிக்கப் படைகளுக்கு ஈரான் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருப்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.