Posted in

தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடை திறப்பா? மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

தமிழகத்தில் பல தசாப்தங்களாகத் தடை செய்யப்பட்டுள்ள கள்ளுக் கடைகளை மீண்டும் திறப்பது குறித்து மாநில அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும், இது தொடர்பாக சாதக பாதகங்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கை முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் கே.விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், “தமிழகத்தில் கள்ளுக் கடைகளை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாகத் துறை ரீதியான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கள்ளுக்கடைகளைத் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சவால்கள் குறித்த ஆரம்பகட்ட ஆய்வு அறிக்கை ஏற்கனவே முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் பார்வைக்குக் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கேரளா எல்லைப் பகுதிகளில் இருந்து கடத்தப்படும் கள்ளச்சாராயம் சில இடங்களில் கள்ளுக் கடைகள் என்ற பெயரிலும் ஊடுருவுவதாகத் தகவல்கள் வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 7,000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “அண்டை மாநில எல்லைகளில் இருந்து சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையிலும், பனை மற்றும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும் கள்ளுக் கடைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து விரைவில் முதலமைச்சர் தலைமையில் கலந்தாலோசித்துச் சரியான முடிவை அரசு அறிவிக்கும்” என்று உறுதியளித்தார்.

தமிழகத்தில் கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் கள்ளுக்கான தடை அமலில் உள்ள நிலையில், பனை விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில், டாஸ்மாக் விற்பனை முறைகேடுகள் மற்றும் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் கட்டணம் வாங்கும் ஊழியர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், கள்ளுக் கடைகள் குறித்த அமைச்சரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும் விவசாயிகள் மத்தியிலும் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.