வடகொரியா தனது கடற்படையைப் அதிநவீன அணுஆயுதப் படையாக மாற்றும் நோக்கில், ‘காங் கோன்’ (Kang Kon) என்ற புதிய 5,000 டன் எடையுள்ள போர்க்கப்பலை (Destroyer) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் கிழக்குக் கடலோர நகரமான ஒன்சான் (Wonsan) துறைமுகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், அதிபர் கிம் ஜோங் உன் தனது மகள் கிம் ஜூ ஏ மற்றும் மனைவி ரி சோல் ஜூ ஆகியோருடன் கலந்துகொண்டு இந்தப் புதிய போர்க்கப்பலைத் திறந்துவைத்தார். ‘காங் கோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 5,000 டன் எடையுள்ள தாக்குதல் கப்பல், நாட்டின் ‘அணுஆயுத எதிர்-தாக்குதல் அமைப்பின்’ (State Nuclear Counteraction System) ஒரு முக்கிய அங்கமாகச் செயல்படும் என வடகொரியக் அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) தெரிவித்துள்ளது.
சுமார் ஓராண்டிற்கு முன்பு வடகொரியாவின் போர்க்கப்பல் ஒன்று சோதனையின் போது விபத்துக்குள்ளாகிப் பலத்த சேதமடைந்த சம்பவத்திற்குப் பிறகு, தற்போது வடகொரியா இந்தக் அதிநவீன போர்க்கப்பலைக் கட்டியெழுப்பியுள்ளது. எதிரிகளின் இலக்குகளைத் தரைமட்டமாக்கும் ஏவுகணைகளை ஏந்தக்கூடிய இந்த ‘காங் கோன்’ கப்பல், வடகொரியக் கடற்படையின் கிழக்குக் கடல்சார் கடற்படைப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “கடல் மற்றும் நீருக்கடியில் நமது இறையாண்மையைப் பாதுகாக்கும் காலம் வந்துவிட்டது” என விழாவில் பேசிய அதிபர் கிம் ஜோங் உன், அடுத்த 8 மாதங்களுக்குள் வடகொரியக் கடற்படையின் அடுத்தகட்ட அணுஆயுத விரிவாக்கத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.