பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த இந்து மத அமைப்புக் குழுவினர் வருகை தந்தபோது, அங்குப் பணியாற்றிய பெண் ஊழியர்களை “கண்ணில் படாதவாறு மறைந்து கொள்ளுமாறு” நிர்வாகம் அறிவுறுத்தியதாக எழுந்த விவகாரம் பிரான்ஸ் முழுவதும் பெரும் சர்ச்சையையும் கண்டனத்தையும் கிளப்பியுள்ளது.
பாரிஸ் புறநகர்ப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட சுவாமிநாராயண் பி.ஏ.பி.எஸ் (BAPS) அமைப்பின் புதிய கோயில் திறப்பு விழாவிற்காக பிரான்ஸ் வந்திருந்த 100-க்கும் மேற்பட்டோர் அடங்கிய ஆன்மீகக் குழுவினர், ஈபிள் கோபுரத்தைப் பார்வையிடச் சென்றனர். அப்போது, அந்தக் குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈபிள் கோபுர நிர்வாகம் தங்களது பெண் ஊழியர்களை அந்தப் பகுதியிலிருந்து விலகி செல்லுமாறும், அவர்களுக்குப் பதிலாக ஆண் ஊழியர்களைப் பணியமர்த்தியும் உத்தரவிட்டதாகக் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பெண் ஊழியர்கள் பாலின அடிப்படையில் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து, பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்தச் சம்பவத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரெஞ்சு தேசிய சட்டமன்றத் தலைவர் யேல் பிரவுன்-பிவெட், “வெளிநாட்டுப் பார்வையாளர்களின் கோரிக்கைக்காகப் பெண் ஊழியர்களை ஒதுங்கி இருக்குமாறு சொல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது; பிரான்சில் பெண்கள் அனைத்துப் பொது இடங்களிலும் சம உரிமையோடு வாழ்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல, ஈபிள் கோபுரத்தை இயக்கும் ‘செட்’ (SETE) நிறுவனமும், இத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது எனக் ஒப்புக்கொண்டதுடன், பாரிஸ் நகர மேயர் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள பி.ஏ.பி.எஸ் (BAPS) அமைப்பு, “ஈபிள் கோபுரத்திற்குப் பொதுமக்கள் தடையின்றி வருவதற்காகவே காலையிலேயே பார்வையிடச் சென்றதாகவும், எந்தவொரு ஊழியருக்கும் இடையூறு விளைவிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை” என்றும் கூறி, இச்சம்பவத்தால் யாருக்கேனும் மனவேதனை ஏற்பட்டிருந்தால் அதற்குத் தங்களது நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுக்கொள்வதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.