Posted in

திபெத் பெருவெள்ளத்தில் மாயமான 49 இந்தியர்கள் – DNA மாதிரிகளைக் கோரிய இந்தியத் தூதரகம்

சீனா – நேபாள எல்லைப் பகுதியான திபெத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் மாயமான 49 இந்தியர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக, அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து டிஎன்ஏ (DNA) மாதிரிகளை வழங்குமாறு சீனாவிலுள்ள இந்தியத் தூதரகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.”

கடந்த ஆகஸ்ட் 26 அன்று திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் பனிப்பாறை பாறைச் சரிவு (Ice-rock avalanche) காரணமாக போதேகோஷி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கைச் சீற்றத்தில் எல்லைக் குடிவரவு அலுவலகக் கட்டிடம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டதில், இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 261 வெளிநாட்டவர் உட்பட மொத்தம் 519 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து சென்ற 49 பேர் இன்னும் கண்டறியப்படாமல் மாயமானோர் பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில், பலியானவர்கள் மற்றும் மீட்கப்படும் உடல்களை அடையாளம் காணும் பொருட்டு, மாயமான வெளிநாட்டவர்களின் குடும்பத்தினரிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகளைப் பெறச் சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாயமான நபர்களின் பெற்றோர்கள், மனைவிகள், குழந்தைகள் அல்லது உடன் பிறந்தவர்களிடமிருந்து பெறப்படும் இரத்த மாதிரிகளின் டிஎன்ஏ தகவல்களை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘கோடிஸ்’ (CODIS) வடிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

குடும்பத்தினர் வழங்கும் இந்த டிஎன்ஏ விவரங்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு மீட்கப்படும் மாதிரிகளோடு பொருந்திப் பார்க்கப்படும். ஏதேனும் முரண்பாடுகள் இன்றி டிஎன்ஏ பொருந்திப் போகும் பட்சத்தில் உடனடியாகக் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என இந்தியத் தூதரகம் உறுதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களுக்குத் தூதரகத்தின் அவசர உதவி எண் (+86 18514284905) மற்றும் மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.