பிரிட்டனில் நடைபெறவுள்ள சர்வதேசக் கார் பந்தயத் தொடரில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமாரின் ரேஸை, அந்நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேரில் பார்வையிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 வரை பிரிட்டன் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்கிறார். அதே நேரத்தில், லண்டனில் உள்ள புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன்’ (Silverstone) பந்தய மைதானத்தில் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ‘மிச்செலின் லீ மான்ஸ் கப்’ (Michelin Le Mans Cup) சர்வதேசக் கார் பந்தயம் நடைபெறவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் ‘அஜித்குமார் ரேசிங்’ அணியின் சார்பில் நடிகர் அஜித் குமார் மற்றும் நரேன் கார்த்திகேயன் ஆகியோர் களம் இறங்குகின்றனர்.
இருவரின் லண்டன் பயணத் திட்டங்களும் ஒரே நேரத்தில் அமைந்துள்ளதால், முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஜித்தின் பந்தயத்தைக் கண்டுகளித்து அவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இரு தரப்பு ரசிகர்களிடையேயும் தீயாகப் பரவி வருகிறது. அண்மையில் தமிழகச் சட்டப்பேரவையில் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ (Motor Sports City) உருவாக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்ததற்கு, “இந்திய மோட்டார் விளையாட்டுத் துறைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி” என அஜித் பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சுவாரசியமான பின்னணியில், முதலமைச்சர் விஜய்யின் அரசுமுறைப் பயணத்தின் நடுவே அஜித்குமாரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகாத நிலையில், திரையுலகம் மற்றும் அரசியல் களத்தில் இந்த சாத்தியமான சந்திப்பு குறித்த விவாதங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.