தமிழக அரசியல் களத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (தவெக) பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையிலான வார்த்தைப் போர் உச்சமடைந்துள்ள நிலையில், “தலைமுறை தலைமுறையாகத் தொட்டுத் தொடரும் திமுகவின் ஆபாச பாரம்பரியம்” என்ற தலைப்பில் தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) திமுக மேடைப் பேச்சுகளைக் கடுமையாக விமர்சித்து எக்ஸ் (X) தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் கொள்கைகளுக்கும் நடைமுறைச் செயல்பாடுகளுக்கும் இடையே மாபெரும் முரண்பாடு நிலவுவதாகச் சாடியுள்ள தவெக ஐடி விங், மேடைகளில் பெண்ணியம் மற்றும் பெண் விடுதலை குறித்துப் பேசும் திமுக தலைவர்கள், நடைமுறையில் பொதுமேடைகள் மற்றும் திருமண விழா மேடைகளில் ஆபாசமான கருத்துகளைப் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் எனக் குற்றம் சாட்டியுள்ளது. ‘குடும்ப வாரிசு + ஆபாசப் பேச்சு + வன்மம் + அவதூறு = திமுகவின் தலைமைத் தகுதிச் சான்றிதழ்’ என்ற கடுமையான விமர்சனச் சமன்பாட்டையும் தவெக முன்வைத்துள்ளது.
மேலும், பேரறிஞர் அண்ணாவின் ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற புகழ்பெற்ற வாசகத்தைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள தவெக ஐடி விங், “பொதுமக்களுக்கு மட்டும் கண்ணியத்தை உபதேசித்துவிட்டு, தங்களின் பொதுமேடைகளில் ஆபாசத்தையும் அவதூறையும் மட்டுமே பேசி வரும் திமுக தலைவர்களின் பேச்சிலேயே இவ்வளவு அசிங்கம் நிறைந்திருக்கிறது என்றால், அவர்களின் ஆட்சியில் எப்படி கண்ணியம் இருந்திருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
சமீபத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே நடைபெற்ற காரசார விவாதங்களைத் தொடர்ந்து, தற்போது இரு கட்சிகளின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளும் சமூக வலைதளங்களில் நேரடியாக மோதுவது தேர்தல் களத்தில் பெரும் அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது.