தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் முதலாவது லண்டன் சுற்றுப்பயணம் தொடர்பாக எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (DMK IT Wing) அடுக்கடுக்கான கேள்விகளையும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது.
கடந்த காலங்களில் ஒரு மாநில முதலமைச்சர் வெளிநாடு செல்கிறார் என்றால், செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் முன்கூட்டியே அதிகாரப்பூர்வச் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டு, பயணத் திட்டம் குறித்த விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போதைய முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் சினிமா கிசுகிசுக்கள் போல ஊடகங்களில் கசியவிடப்படுகிறதே தவிர, வெளிப்படையான தகவல்கள் அரசிடமிருந்து துல்லியமாக வரவில்லை என்று திமுக ஐடி விங் குற்றம் சாட்டியுள்ளது.
இது தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமா அல்லது தனிப்பட்ட முறையிலான சுற்றுப்பயணமா என்ற நேரடிச் சந்தேகத்தையும் திமுக எழுப்பியுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் பயணத்தில் ஏன் இவ்வளவு ரகசியங்கள் நீடிக்க வேண்டும் என்றும், வழக்கமாகப் புறப்படும் முன் செய்தியாளர்களைச் சந்திக்கும் மரபை மீறி ஊடகங்களைச் சந்திக்க முதலமைச்சர் தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த 8 நாட்கள் லண்டன் பயணத்தின் மூலம் ரூ.8,400 கோடிக்கும் அதிகமான புதிய முதலீடுகள் ஈர்க்கப்படவுள்ளதாக அரசும் தவெக தரப்பும் மறுபுறம் விளக்கம் அளித்துள்ள நிலையில், வெளிப்படைத்தன்மை இல்லை என்ற திமுகவின் இந்தக் குற்றச்சாட்டு தமிழக அரசியல் களத்தில் இரு கட்சிகளுக்கும் இடையிலான வார்த்தைப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.