லண்டனின் புகழ்பெற்ற ஹீத்ரூ (Heathrow) சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 பகுதியில், முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் ஒன்று கண்ணீர்ப்புகைக் குண்டை (CS Spray) வீசித் தாக்குதல் நடத்திவிட்டுப் பயணிகளின் சூட்கேஸ்களைப் பறித்துச் சென்ற கொடூர சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு வந்ததை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலிருந்து விமானம் மூலம் லண்டன் வந்திறங்கிய இரு பெண் பயணிகளை இலக்கு வைத்து இந்தக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. விமான நிலைய லிஃப்ட் மற்றும் டாக்ஸி நிறுத்தும் பகுதியில் வைத்து முகமூடி அணிந்த கும்பல் அப்பெண்களின் முகத்தில் மிக அருகில் கண்ணீர்ப்புகையை அடித்து, அவரிடமிருந்த விலைமதிப்பற்ற சூட்கேஸ்களைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளது.
இந்த நச்சு வாயுத் தாக்குதலால் அருகில் உள்ள காபி கடையிலிருந்த ஊழியர்கள் மற்றும் பயணிகள் உட்பட பலருக்குக் கடுமையான இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிலர் ரத்த வாந்தி எடுத்ததாக லண்டன் ஐஸ்லேவொர்த் சீர்மை நீதிமன்றத்தில் (Isleworth Crown Court) சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தை அடுத்து விமான நிலையத்தின் டெர்மினல் 3 பகுதி பல மணி நேரம் முழுமையாக முடக்கப்பட்டு, அவசர மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
இக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட டைரோன் ரிச்சர்ட்ஸ், அந்தோனி கிளார்க் உள்ளிட்ட நான்கு பேரை லண்டன் காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். சர்வதேச விமான நிலையத்தின் உயர்பாதுகாப்பு மண்டலத்தில் அரங்கேறிய இந்தத் தாக்குதல் சம்பவம், பிரிட்டன் விமான நிலையங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மீண்டும் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.