செப்டம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போர் இன்னும் முடியவில்லை என்றும், “பயங்கரவாதிகளை அவர்கள் சேர வேண்டிய இடமான நரகத்திற்குத் தொடர்ந்து அனுப்பி வருகிறோம்” என்றும் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் உயிரிழந்த சுமார் 3,000 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகப் பென்டகன் (Pentagon) வளாகத்தில் நடைபெற்ற நினைவு அஞ்சலி கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் ஆகியோர் கலந்துகொண்டனர். நியூயார்க் கிரவுண்ட் ஜீரோ நிகழ்வில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பங்கேற்ற நிலையில், பென்டகன் நிகழ்வில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், 9/11 நாளில் உறுதியேற்ற புனிதமான சபதத்தை அமெரிக்கா என்றும் மறக்காது எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டிரம்பும் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத்தும், தற்போதைய ஈரானியப் போரையும் 9/11 தாக்குதலுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையோடு தொடர்புபடுத்திப் பேசினர். “உலகிலேயே பயங்கரவாதத்திற்கு அதிகளவில் நிதியுதவி அளிக்கும் ஈரானிடம் அணுஆயுதம் சேர்வதை அமெரிக்க ராணுவம் ஒருபோதும் அனுமதிக்காது; பயங்கரவாதிகளை நரகத்திற்கும், அவர்களின் கப்பல்களைக் கடலின் அடி ஆழத்திற்கும் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என எச்சரித்தனர்.
அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கவுமே அமெரிக்க ராணுவம் இந்த உறுதியானப் போரை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட டிரம்ப், “நமக்கு வெற்றி தவிர வேறு வழியில்லை” எனக் முழக்கமிட்டார். 9/11 தாக்குதலின் கால் நூற்றாண்டு நினைவு நாளில் அதிபர் டிரம்ப் ஆற்றிய இந்த ஆவேசப் பேச்சு சர்வதேச அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.