உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்தின் ‘கிசா மாபெரும் பிரமிட்டின்’ (Great Pyramid of Giza) 4,500 ஆண்டுகள் பழமையான கட்டுமான அளவீடுகளுக்குள் பிரபஞ்ச அறிவியல் மற்றும் வானியல் ரகசியங்களைக் கொண்ட கணிதவியல் குறியீடு (Secret Mathematical Code) ஒளிந்திருப்பதாகத் தொல்பொருள் ஆய்வாளர் செஃபி லெவி (Sefy Levy) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரமிட் சுவர்களில் எந்தவொரு ரகசிய எழுத்துக்களும் பொறிக்கப்படவில்லை என்றும், மாறாகப் பிரமிட்டின் உயரம், அடிவாரம், சாய்வு கோணம் மற்றும் அதன் ஒட்டுமொத்த வடிவியல் அளவீடுகளிலேயே இந்தக் குறியீடுகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் சுயாதீன ஆய்வாளர் செஃபி லெவி தெரிவித்துள்ளார். பண்டைய எகிப்திய எழுத்தாளர்கள் பயன்படுத்திய கணித பின்னங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அளவீடுகளைப் பகுப்பாய்வு செய்தபோது, நிலவு, சிரியஸ் நட்சத்திரம் மற்றும் வியாழன் உள்ளிட்ட கோள்களின் சுழற்சி சுழற்சிகளைப் பிரதிபலிக்கும் எண்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டுள்ளன.
“பிரமிட் என்பது அறிவைச் சேமித்து வைத்துள்ள ஒரு பெட்டகம் அல்ல; அது கல்லாக மாற்றப்பட்ட அறிவே ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ள ஆய்வாளர் லெவி, பண்டைய எகிப்தியர்கள் தங்களின் கணிதம் மற்றும் வானியல் அறிவை எதிர்வரும் தலைமுறைகளுக்கு அழியாமல் கடத்துவதற்காகவே பிரமீட்டை ஒரு நிரந்தர நினைவகமாகப் (Permanent Record of Knowledge) வடிவமைத்துள்ளனர் என்று வாதிடுகிறார். மேலும், மன்னர் கூஃபுவின் கல்லறையாக மட்டுமே பிரமிட் பார்க்கப்பட்ட பாரம்பரியக் கருத்தையும் இவரது ஆய்வு கேள்விக்குட்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வு இன்னும் சுயாதீன அறிவியல் வல்லுநர்களின் மறுஆய்வுக்கு (Peer-review) உட்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருந்தாலும், 1,00,000 கணினி மாதிரிகளுடன் ஒப்பிட்டு இந்த எண்கள் தற்செயலானவை அல்ல என நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால் சர்வதேச வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடையே இது தீவிர விவாதத்தைக் கிளப்பியுள்ளது.