Posted in

ஃபிளைதுபாய் விமானியின் தாக்குதல் முயற்சி: சவூதியில் அவசர தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பு!

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சுமார் 174-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் FZ1073 என்ற பிளைதுபாய் (Flydubai) விமானம் பயணித்தது. விமானம் வடமேற்கு சவூதி அரேபிய வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது ஓமன் நாட்டைச் சேர்ந்த இணை விமானி, இந்திய வம்சாவளி தலைமை விமானியான ஸ்மித் மச்சார் என்பவரைத் தாக்கி விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

காக்பிட்டில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் வெறும் ஒரு நிமிடத்திற்குள் சுமார் 14,000 அடி உயரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கியது. அப்போது காயமடைந்த போதிலும் தலைமை விமானி ஸ்மித் மச்சார் காக்பிட் கதவைத் திறக்க நடவடிக்கை எடுத்ததாகவும், விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பிற பணியாளர்கள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்திய இணை விமானியைக் கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது அவசர உதவிக்கான ‘7500’ என்ற சர்வதேச கடத்தல் எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பப்பட்டது. பின்னர் விமானம் சவூதி அரேபியாவில் உள்ள தபூக் (Tabuk) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதில் காயமடைந்த இரு விமானிகளும் தபூக்கில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட இணை விமானி கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், விமானியின் சாதுரியமான செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியா அல்லது தனிப்பட்ட கோபமா என்பது குறித்து பிளைதுபாய் நிறுவனம் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் டெல் அவிவ் நகருக்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.