Posted in

ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம் இடிப்பு: சௌந்தர்யா ரஜினிகாந்த் உறுதி!

சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்திற்குச் சொந்தமான ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம் இடிக்கப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாயின. தனது தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லவ்’ வெப் சீரிஸ் விளம்பர நிகழ்வில் பங்கேற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

நிகழ்ச்சியில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சௌந்தர்யா, “ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம் கடந்த 36 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்துடன் இணைந்த சென்னையின் மிகப்பெரிய அடையாளம்” என்று தெரிவித்தார். மேலும், “அதற்கான காலம் முடியும் போது அது அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்றும், காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்றும் அப்பா ரஜினிகாந்த் எப்போதும் நினைப்பார்” எனக் கூறினார்.

அந்த வகையில் ராகவேந்திரா திருமண மண்டபத்தின் பயணம் நிறைவடைந்துவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் என்ன செய்வது என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் விளக்கமளித்தார். மண்டபம் இருந்த இடத்தில் நட்சத்திர விடுதி (Star Hotel) அமைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1990-களில் கட்டப்பட்ட இந்த திருமண மண்டபம், ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற சந்திப்புகள் மற்றும் அவரது அரசியல் அறிவிப்புகள் நிகழ்ந்த முக்கிய இடமாக விளங்கியது. தற்போதைக்கு மண்டபத்தின் இடிப்புச் பணிகள் தொடர்பான அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் கட்டுமான தேதிகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.