இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு 21 வயதான நபீலா ராசா (Nabila Raza) என்ற 6 மாத கர்ப்பிணிப் பெண், அவரது கணவர் குடும்பத்தினரால் மூச்சுத்திணறடிக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். நபீலாவின் உடலில் துர்சக்தி அல்லது பேய் புகுந்துள்ளதாக நம்பி, அதை விரட்டுவதாகக் கூறி கணவர் முகமது தௌசீப் மும்தாஜ் (Mohammad Tauseef Mumtaz) மற்றும் அவரது குடும்பத்தினர் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இக்கொலை வழக்கு தொடர்பாக பர்மிங்ஹாம் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, கடந்த 2012-ஆம் ஆண்டு முகமது தௌசீப் மும்தாஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் சிறையிலிருந்த அவர், தற்போது தண்டனைக் காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து பரோல் வாரியத்தின் ஒப்புதலுடன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமாகக் கொன்ற குற்றவாளி விடுவிக்கப்பட்ட செய்தி இங்கிலாந்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கையின் பெயரால் நடத்தப்படும் இத்தகைய கொடூரக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
விடுவிக்கப்பட்ட போதிலும் மும்தாஜ் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார் என்றும், பரோல் விதிமுறைகளை மீறினால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இக்கொலை வழக்கில் தொடர்புடைய குடும்பத்தின் பிற உறுப்பினர்களின் தண்டனை மற்றும் அவர்களின் சட்டப் போராட்டங்கள் தொடர்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.