சீனா இரகசியமாக இயக்கி வரும் ‘ஷென்லாங்’ (Shenlong) என்ற மறுபயன்பாட்டு விண்வெளி விமானத்தின் மிகத் தெளிவான புகைப்படத்தை அமெரிக்காவின் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு (DIA) தனது புதிய அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் ‘மேக்சார் டெக்னாலஜிஸ்’ (Maxar Technologies) செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த விண்கலத்தின் அடிப்பகுதி மற்றும் சூரிய ஒளித் தகடுகள் (Solar panels) மிகத் தெளிவாகக் காட்சிளிக்கின்றன.
அமெரிக்க விண்வெளிப் படையின் எக்ஸ்-37பி (X-37B) விண்கலத்தைப் போன்ற வடிவமைப்பைக் கொண்ட இந்த விண்கலம் குறித்த விவரங்களைச் சீனா இதுவரை ரகசியமாகவே வைத்துள்ள நிலையில், இந்த புகைப்படம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
விண்வெளியில் பிற பொருட்களை வெளியிடுவது, ஆய்வு செய்வது மற்றும் மீண்டும் பூமிக்குத் திரும்புவது போன்ற நவீன தொழில்நுட்பப் பரிசோதனைகளுக்காக இத்தகைய விண்கலங்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு முதல் இதுவரை நான்கு முறை இந்த விண்கலம் விண்வெளிப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகக் தரவுகள் கூறுகின்றன.
குறிப்பாக 2026 பிப்ரவரி 7-ஆம் தேதி ஜியுகுவான் மையத்திலிருந்து ஏவப்பட்ட இதன் நான்காவது விண்வெளிப் பயணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள இந்த அறிக்கை விண்வெளி பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. வழக்கமான செயற்கைக்கோள்களை விட இத்தகைய மறுபயன்பாட்டு விண்கலங்கள் விண்வெளியில் உளவு பார்க்கவும் மற்ற விண்கலங்களை ஆய்வு செய்யவும் அதிக திறன் கொண்டவை என வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், அமைதியான நோக்கங்களுக்காகவே இந்த விண்வெளிப் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகச் சீனா தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
விண்வெளியில் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான தொழில்நுட்பப் போட்டி தீவிரமடைந்து வரும் சூழலில், இந்த புதிய புகைப்படம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இவ்விண்கலத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் அது பூமியில் தரையிறங்கும் காலம் குறித்து சர்வதேச விண்வெளி அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.