பிரான்ஸின் ஹார்டிலோட்-பிளேஜ் (Hardelot-Plage) கடற்கரைப் பகுதியில் இருந்து இங்கிலாந்து நோக்கிச் செல்ல முயன்ற சிறிய ரப்பர் படகில் (Dinghy) ஏறுவது தொடர்பாகப் புலம்பெயர்ந்தோரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இடுப்பளவு கட நீரில் நின்றுகொண்டு கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் ஒருவர், படகில் இருந்தவரைத் தாக்கிவிட்டு இங்கிலாந்து நோக்கிய படகில் ஏறிய காட்சிப் பதிவாகியுள்ளது. சுமார் மூன்று வார கால இடைவெளிக்குப் பிறகு பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கான சிறிய படகுப் பயணங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 900-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்தை அடைந்துள்ளனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 9 படகுகளில் 671 பேர் இங்கிலாந்து எல்லைக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத் தரவுகள் தெரிவிக்கின்றன. படகில் ஏறும் போது “நான் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று கூறி கத்தியுடன் மிரட்டிய நபர், கடலுக்குள் ஆயுதத்தைப் போட்டுவிட்டு இங்கிலாந்து செல்லும் படகில் ஏறியதாகப் பிரஸ் அசோசியேஷன் (PA) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்தின் நிழல் உள்துறை அமைச்சர் கிறிஸ் பிலிப், “கட்டுப்பாடற்ற எல்லைப் பாதுகாப்பால் இங்கிலாந்தின் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகி வருகிறது” என விமர்சித்துள்ளார். பிரான்ஸ் எல்லையில் கூடுதல் அதிகாரிகளைப் பணியமர்த்திச் சட்டவிரோதக் கடத்தல்காரர்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் மனித கடத்தல் கும்பல்களின் பிடியில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க சர்வதேசக் கூட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது ஆங்கிலக் கால்வாய் கடலோரப் பகுதிகளில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
காயமடைந்த நபர்கள் மற்றும் படகில் பயணித்த பிற நபர்களின் விவரங்கள் குறித்து இங்கிலாந்து எல்லைக் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.