ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அமைந்து அமைந்திருக்கும் சார்ட்சினோ அருங்காட்சியகம் மற்றும் பூங்கா வளாகத்தில் (Tsaritsyno Museum Reserve) அதிக அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலான ‘நம்பகமான அச்சுறுத்தல்’ (Credible threat) நிலவுவதாக அமெரிக்கத் தூதரகம் அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து அமெரிக்கக் குடிமக்கள் அந்த அருங்காட்சியகப் பகுதிக்கும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பான தகவல்கள் ரஷ்ய அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்துச் செய்தி வெளியிட்டுள்ள ரஷ்யாவின் கூட்டாட்சிப் பாதுகாப்புச் சேவை (FSB), அமெரிக்கத் தரப்பிலிருந்து அச்சுறுத்தல் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதை உறுதி செய்துள்ளதுடன், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. தகவல் வெளியானதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சார்ட்சினோ அருங்காட்சியக வளாகம் மூடப்பட்டு, அப்பகுதியில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்தத் தாக்குதல் திட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கூடுதல் விவரங்களை அமெரிக்கத் தூதரகம் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
முன்னதாக 2024 மார்ச் மாதத்தில் மாஸ்கோவின் குரோகஸ் சிட்டி ஹால் அரங்கில் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்பாகவும், இதேபோன்று அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்ததை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தற்போது கனடா அரசாங்கமும் தனது குடிமக்களுக்கு ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு கூடுதல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது அருங்காட்சியகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்ய பாதுகாப்புப் படையினர் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்கா வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலதிகத் தேடுதல் வேட்டையை ரஷ்யப் பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.