தமிழ்நாட்டின் பிரபல சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் உள்ள ‘ஸ்கைபார்க்’ (Skypark) அமைப்பில் புதுமையான ‘ஸ்கை டைன்’ (Sky Dine) உணவு அனுபவச் சேவை வரும் நவம்பர் 4-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது. வெளிநாடுகள் மற்றும் சில பெருநகரங்களில் மட்டுமே காணப்பட்டு வந்த இந்தச் சாகசக் கலாச்சாரம், தற்போது ஏற்காட்டின் சேவராய் மலைச் சூழலில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பிரத்யேக ராட்சதக் கிரேன் மற்றும் நவீன பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் உணவருந்தும் தளம் வான்வெளியில் உயர்த்தப்பட்டுப் பயணிகள் உணவருந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சாகச அமைப்பில் ஒரே நேரத்தில் 16 பயணிகள் வரை பாதுகாப்பாக அமர்ந்து 360 டிகிரி கோணத்தில் ஏற்காட்டு மலைக்காட்சிகளை ரசித்தபடி உணவருந்த முடியும். ஒருமுறை வான்வெளியில் மிதப்பதற்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு, பயணிகளுக்குச் சுவையான சிற்றுண்டிகளும் குளிர்பானங்களும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பெறக் குறைந்தபட்சம் 10 நபர்கள் சேர்ந்து முன்பதிவு செய்ய வேண்டும் என்ற விதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள் விழாக்கள், திருமண நாள் கொண்டாட்டங்கள் மற்றும் தனிப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் இத்தளத்தைப் பிரத்யேகமாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்காட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடையே இந்த புதிய சாகச அனுபவம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உயரிய பாதுகாப்பு தரநிலைகளுடன் இந்தச் சாதனம் அமைக்கப்பட்டுள்ளதாகப் பூங்கா நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ‘ஸ்கை டைன்’ தளத்திற்கான இறுதி கட்ட சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்து தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
வரும் நவம்பர் 4 முதல் சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவு மூலம் இந்தச் சேவையைப் பெறலாம்.