தமிழக அமைச்சரவை உறுப்பினர் ஆதவ் அர்ஜுனாவிடமிருந்து பிரிந்து தனித்தனிப் பாதைகளில் பயணிக்க முடிவெடுத்துள்ளதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் தங்களது 14 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் ஆகியோரின் மகளான டெய்சி மார்ட்டின், கடந்த 2012-ஆம் ஆண்டு ஆதவ் அர்ஜுனாவைத் திருமணம் செய்து கொண்டார். ஏரீஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (Aries Investments) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் டெய்சி மார்ட்டின், கடந்த சில ஆண்டுகளாகவே கணவருடன் இருக்கும் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்வதைத் தவிர்த்து வந்தார்.
இந்தப் பிரிவு குறித்து டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தங்களது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருந்தாலும், தங்களது குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சி மற்றும் நலனை உறுதி செய்வதிலும் தொடர்ந்து மிகுந்த முன்னுரிமை அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இத்தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், தற்போது சட்டப்பூர்வமாகப் பரஸ்பர விவாகரத்துப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியலில் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் ஆதவ் அர்ஜுனா மற்றும் மார்ட்டின் குடும்பத்தினர் இடையே ஏற்கனவே அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த சூழலில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் இதுவரை தனிப்பட்ட விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.