இங்கே நாம் சொல்லும் விஷயங்களை மிகவும் கவனமாக வாசியுங்கள். பல விஷயங்கள் புரியும். மார்ச் மாதம் 12-ஆம் தேதி அன்று, ஆளுநர் அரலீக்கரைத் தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநராக டெல்லி நியமிக்கிறது. ஆளுநர் ரவி இடமாற்றம் செய்யப்படுகிறார். அது ஏன்? கேரளாவின் ஆளுநராக இருக்கும் அரலீக்கரைத் தற்காலிகமாகத் தமிழ்நாட்டையும் கவனித்துக் கொள்ளுமாறு டெல்லி கூறுகிறது; அது ஏன்? மார்ச் மாதம் 12-ஆம் தேதி, அதாவது தேர்தல் நடைபெற ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த விஷயம் நடக்கிறது.
மத்திய உளவுத்துறை அறிக்கை மற்றும் மாநில உளவுத்துறையின் அறிக்கையின்படி மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்ட ஒரே விஷயம், தொங்கு சட்டமன்றம்; யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பதுதான். இதேவேளை விஜய் அவர்கள் பல இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது என்பதும் அதில் இருந்தது. இதனால்தான் பிஜேபி (BJP) அரசு அதிமுகவை வைத்து எப்படியாவது விஜய்யைத் தமது கூட்டணிக்குள் இழுக்க முயற்சி செய்தது. ஆனால் அது பலிக்கவில்லை. ‘ஜனநாயகன்’ படத்தைத் தடை செய்தது, கரூர் விவகாரத்தில் விஜய்யைத் டெல்லிக்கு அழைத்து சிபிஐ (CBI) மிரட்டியது எனப் பல நடந்தும் விஜய் அடிபணியவில்லை.
இந்த நிலையில் ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்தால், வெற்றி பெற்ற கட்சி நிச்சயமாகச் செல்ல வேண்டிய இடம் எது? அது ஆளுநர் மாளிகை. ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தைக் கொடுக்க வேண்டும். எனவே, அண்டை மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஆளுநரை நியமித்தால், அவர் இரண்டு மாநிலங்களையும் கவனிக்க வேண்டி இருக்கும். இதனைக் காரணம் காட்டியே அவர் கேரளாவில் தங்கி விடலாம் அல்லது தமிழ்நாடு வருவதைக் குறைத்துக் கொள்ள முடியும். அப்படி என்றால் விஜய்யால் ஆளுநரைச் சந்திப்பது கடினமாகும் அல்லவா?
மேலும், ஒரு கட்சி தனது பலத்தை ஆளுநரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை; நிரூபிக்க வேண்டிய ஒரே இடம் சட்டமன்றம் தான். எனவே உண்மையில் விஜய்யிடம் 113 உறுப்பினர்கள் இருக்கும் பட்சத்தில், மேலும் 5 உறுப்பினர்கள் மட்டுமே தேவை என்றால், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவிட்டு, 2 வாரங்களில் அல்லது 10 நாட்களில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்டுங்கள் என்று கூறுவதே முறையான வழக்கம். ஆனால் ஆளுநர், “118 பேரை முதலில் காட்டுங்கள்” என்று கூறுவதிலும், “முன்னர் நடந்த ஒரு நீதிமன்றத் தீர்ப்பை ஆதாரமாக வைத்தே இந்த முடிவை எடுத்தேன்” என்று சொல்வதிலும் பெரும் உள்குத்து இருக்கிறது. அதாவது..
நீங்கள் நீதிமன்றம் சென்றாலும் எனக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்பதையும் ஆளுநர் அரலீக்கர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். தற்போது அவர் விசேட ஹெலிகாப்டரில் புறப்பட்டுக் கேரளா சென்று விட்டார். இனி எப்போது வருவார் என்பது தெரியாது. இதேவேளை மே 6-ஆம் தேதி காலை முதல் மாலை வரை, “நாங்கள் யோசித்து பதில் சொல்கிறோம்” என்று கூறிவந்த விடுதலைச் சிறுத்தைகள் திடீரெனச் சறுக்கல் போக்கைக் கடைப்பிடிக்க, அதே பாணியில் கம்யூனிஸ்டுகளும் செல்ல, விஜய்யால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது என்பதே யதார்த்தம் ஆகும்.
கம்யூனிஸ்டுகளின் இந்தத் திடீர் மன மாற்றத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகளின் மாற்றத்திற்கும் என்ன காரணம் என்பது சிதம்பர ரகசியம். இதற்குப் பின்னால் நிச்சயம் பிஜேபி இருக்கிறது என்பது உண்மை. இதே நிலை நீடித்தால் மீண்டும் தமிழ்நாட்டில் ஒரு புதிய தேர்தல் நடக்கும் சூழல் உருவாகலாம். ஆனால் அந்தத் தேர்தலில் விஜய் முன்பை விட அதிக வாக்குகளை வாங்குவார் என்பது உறுதி. காங்கிரஸ் கட்சி த.வெ.க-வோடு இணைந்தது மட்டுமல்லாமல், 2029-ல் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவது என்ற முடிவை அவர்கள் எட்டியது, மத்தியில் ஆளும் பிஜேபி அரசுக்குப் பெரும் எரிச்சலை ஊட்டியுள்ளது. இதனால்தான் பிஜேபி அரசு, மக்கள் ஆணை பெற்ற விஜய்யைப் பதவியேற்க விடாமல் தடுக்கிறது. தனது அதிகாரத்தை எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் பயன்படுத்துகிறது.
இதற்குச் சிறந்த ஒரு உதாரணம், 2017-ஆம் ஆண்டு ஜெயலலிதா இறந்தபோது நிகழ்ந்தது. பல சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து சசிகலாவை முதல்வராக்கக் கையெழுத்திட்டார்கள். அதனை ஆளுநரிடம் கொடுக்க இருந்தபோது அவர் மாளிகையில் இல்லை; அவர் 7 நாட்களாக வரவும் இல்லை. இதையும் பிஜேபி திட்டமிட்டே நடத்தியது. அதன் பின்னர் திடீரென நீதிமன்றத் தீர்ப்பு வந்ததால் சசிகலா சிறை சென்றார். விஜய் அவர்களுக்குச் சிறுபான்மை மக்கள், அதாவது முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதனை இன்றுவரை மதிக்கும் விஜய், இதனால்தான் இதுவரை அதிமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை; காரணம் அவர்கள் அணியில் பிஜேபி என்கிற மதவாதக் கட்சி இருக்கிறது. இதனால்தான் விஜய், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டுகளிடம் ஆதரவைக் கோரியிருந்தார். ஆனால் இறுதியில் அவர்கள் கூடப் பிஜேபி கட்சியின் நிழலில் இருப்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவில் எங்கே ஜனநாயகம் இருக்கிறது? மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்!