Posted in

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க முற்றுகையை மாதக்கணக்கில் தாங்கும் ஈரான்; “70% ஏவுகணைகள் இன்னும் பத்திரமாக உள்ளன” – சிஐஏ ரகசிய அறிக்கையால் அமெரிக்காவிற்குப் பின்னடைவு 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் ராணுவ பலம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டதாகக் கூறி வரும் வேளையில், அதற்கு நேர்மாறான தகவலை சிஐஏ-வின் ரகசிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்குப் பிறகும், ஈரானிடம் சுமார் 75 சதவீத நடமாடும் ஏவுகணை ஏவுதளங்களும் (Mobile Launchers), 70 சதவீத ஏவுகணை இருப்பும் இன்னும் அப்படியே இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஈரானின் நிலத்தடி சேமிப்புக் கிடங்குகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் உள்ள ஆயுதங்களை அமெரிக்காவால் இன்னும் அழிக்க முடியவில்லை என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை ஒரு “இரும்புச் சுவர்” போன்ற முற்றுகையை ஏற்படுத்தியிருந்தாலும், ஈரான் தனது உள்நாட்டுத் தேவைகளையும் ராணுவச் செலவுகளையும் குறைந்தது 90 முதல் 120 நாட்கள் வரை எவ்விதச் சிக்கலுமின்றித் தாங்கும் பொருளாதார வலிமையைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானின் ‘மொஸ்கிட்டோ ஃலீட்’ (Mosquito Fleet) எனப்படும் அதிவேகப் படகுகள் மற்றும் ட்ரோன் படைகள் ஹார்முஸ் ஜலசந்தியில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தத் தயாராக உள்ளன. இதனால், அமெரிக்காவால் இன்னும் இந்தப் பாதையை வணிகக் கப்பல்களுக்காக முழுமையாகத் திறந்துவிட முடியவில்லை.

இந்தச் செய்தி வெளியான நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்களது ஏவுகணைத் திறன் 120 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமெரிக்காவைக் கிண்டல் செய்துள்ளார். “அமெரிக்காவின் போலித் தரவுகள் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறிக்கொள்ள உதவுமே தவிர, கள நிலவரத்தை மாற்றாது” என்று அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இது போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் கையை ஓங்கச் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 101 டாலரைத் தாண்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளதால் உலக நாடுகளுக்குச் செல்லும் 20 சதவீத எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. “ஈரானை பொருளாதார ரீதியாக நசுக்கிவிடலாம்” என்ற அமெரிக்காவின் கணக்கு, சிஐஏ-வின் இந்த புதிய அறிக்கையால் கேள்விக்குறியாகியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகள் முன்னெடுத்து வரும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், வரும் மாதங்களில் பாரசீக வளைகுடாவில் ஒரு மிகப்பெரிய கடற்போர் வெடிக்கும் அபாயம் நிலவுகிறது