சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் அருண் ராஜ் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வுகளின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், “அரசு மருத்துவமனைகளில் போதிய சுத்தம் மற்றும் சுகாதாரம் இருப்பதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ளதே?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், “அரசு மருத்துவமனைகளில் சுத்தம் மற்றும் சுகாதாரம் இருக்காது என்ற பொதுவான குற்றச்சாட்டின் காரணமாகத்தான் பலர் அங்கு செல்லத் தயங்கி, தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்கின்றனர்; ஆனால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு மிகச் சிறந்த நிலையில்தான் உள்ளது” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், “அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் தங்களுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வார்களா?” என்ற நேரடிக் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு எவ்விதத் தயக்கமும் இன்றி பதிலளித்த அமைச்சர் அருண் ராஜ், “கண்டிப்பாக நாங்கள் அரசு மருத்துவமனைகளில்தான் இனி சிகிச்சை எடுத்துக் கொள்வோம். அரசு மருத்துவமனைகளை நாங்களே நம்பவில்லை என்றால், பிறகு பொதுமக்கள் எப்படி நம்புவார்கள்? நாங்களே முன்மாதிரியாக இருந்து அரசு மருத்துவமனைகளை முழுமையாகப் பயன்படுத்துவோம்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியும், மருத்துவப் பட்டதாரியுமான அமைச்சர் அருண் ராஜின் இந்த எதார்த்தமான பேச்சு ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு, தங்களுக்கு மக்கள் அளித்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் செயல்படத் தொடங்கியுள்ளதாகப் பாராட்டும் சமூக ஆர்வலர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்களது சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளை நாடத் தொடங்கினால் மட்டுமே மருத்துவமனைகளின் தரம் மேலும் உயரும் என்றும், இது ஒட்டுமொத்த மருத்துவத் துறைக்கே ஒரு ஆரோக்கியமான மாற்றமாக அமையும் என்றும் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிரான வட இந்திய கடையடைப்புப் போராட்டக் காலத்திலும் தமிழ்நாட்டில் 5,000 மருந்தகங்கள் தடையின்றி இயங்கவும், அவசர கால மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் சுகாதாரத்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் உரிமைக்கு எதிரானது என்பதால் ‘நீட் வேண்டாம்’ என்பதே தவெக-வின் கொள்கை முடிவு என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள அமைச்சர் அருண் ராஜ், அரசு மருத்துவமனைகளின் மருத்துவச் சேவைகளை உலகத் தரத்திற்கு உயர்த்த அடுத்தடுத்து தீவிரமான கள ஆய்வுகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.