Posted in

அடிக்க வராங்க.. உச்சகட்ட கோபம்.. கொந்தளித்த ராஜ்மோகன்.. பேரவையில் பிரளயம்

சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) உறுப்பினர்களுக்கிடையே கடுமையான காரசார விவாதம் வெடித்து சட்டசபையை பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அவையில் உறுப்பினர்கள் சிலர் ஒருமையிலும், மரபுக்கு மாறாகவும் பேசிய சொற்கள் பேரவையின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமைந்ததாகக் கூறி தவெக தரப்பில் கடும் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன. “பைத்தியம் மாதிரி பேசுறாங்க,  வாடா போடா எனப் பேசுவது இந்த மரபுக்கு விரோதமானது, இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்” என்று அமைச்சரும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற துணைத் தலைவரிடம் சுட்டிக்காட்டி முறையிட்டனர்.

அவையின் நேரலை ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் வேளையில், எதிர்க்கட்சி தரப்பில் இருந்து சில உறுப்பினர்கள் ஆவேசமடைந்து பாய்ந்து வர முயன்றதாகவும், அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. “என்ன வார்த்தை அது, இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, தவறான வார்த்தை! அடிக்கறதுக்கு பாஞ்சு வராரு, கைய வாங்கிட்டு வராரு” என பேரவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பேரவை துணைத் தலைவர் தலையிட்டு, அவையில் பேச அனுமதி இல்லாதவர்களின் மைக்கை துண்டிக்குமாறும், உறுப்பினர்களை அவரவர் இருக்கையில் அமருமாறும் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தவெக தரப்பில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “எங்கள் பக்கம் இருக்கும் உறுப்பினர்களை கட்டுப்படுத்துவதற்கு எங்களுடைய வெற்றி தலைவரின் ஒரே ஒரு கடைக்கண் பார்வை போதும்” எனக் கூறி, அவையின் கட்டுப்பாட்டை சுட்டிக்காட்டினார். மேலும், பேரவை விதிகளை மீறி செயல்படும் உறுப்பினர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவைத் தலைமை, பேரவைத் தலைவர் வந்தவுடன் இச்சம்பவம் குறித்த முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது.

சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட இந்த கடுமையான மோதலும், வார்த்தைப் போரும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபை மரபுகளையும் ஜனநாயகப் பண்புகளையும் பாதுகாத்து காரசார விவாதங்களை நாகரிகமான முறையில் நடத்த வேண்டும் என்பதே அரசியல் வல்லுநர்கள் மற்றும் மக்களின் கருத்தாக உள்ளது.