Posted in

எபோலா அச்சுறுத்தல்: காங்கோ எல்லையை உடனடியாக மூட உகாண்டா அதிரடி உத்தரவு!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் (DRC) மிக அரிதான வகை எபோலா வைரஸ் நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருவதை அடுத்து, அண்டை நாடான உகாண்டா தனது நாட்டின் பாதுகாப்பைக் கருதி காங்கோவுடனான எல்லையை ‘உடனடியாக’ மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உகாண்டா துணை அதிபர் ஜெஸ்கா அலுப்போ தலைமையிலான அவசர எபோலா தடுப்புக் குழு கூடி இந்த இக்கட்டான முடிவை எடுத்துள்ளது. காங்கோவில் கடந்த மே 15 அன்று எபோலா பாதிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அங்கிருந்து எல்லை தாண்டி வந்த நோயாளிகளால் உகாண்டாவின் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் பலருக்கு எபோலா தொற்று பரவியதை அடுத்தே இந்த அவசர நடவடிக்கை பாய்ந்துள்ளது .

தற்போது பரவி வரும் எபோலா வைரஸ், வழக்கமான வைரஸ் போலல்லாமல் ‘புண்டிபுகியோ’ (Bundibugyo) எனப்படும் மிகவும் அரிய மற்றும் ஆபத்தான வகையைச் சேர்ந்தது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. இந்த குறிப்பிட்ட வகை எபோலா நோய்க்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ (Vaccines) கண்டறியப்படவில்லை என்பதுதான் தற்போதைய உலகளாவிய மருத்துவக் கவலைக்கு முக்கியக் காரணமாகும். தற்போதைய நிலவரப்படி, காங்கோவின் கிழக்கு மாகாணங்களில் எபோலா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து, சந்தேகிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 1,000-ஐ நெருங்கியுள்ளதுடன், பலி எண்ணிக்கையும் 220-ஐ கடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உகாண்டா அரசின் இந்த திடீர் எல்லை மூடல் நடவடிக்கையானது, உலக சுகாதார அமைப்பின் (WHO) பொதுவான மருத்துவ நெறிமுறைகளுக்கு மாறானது என்று அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். எல்லைகளை முழுமையாக மூடுவதன் மூலம் மக்கள் அதிகாரப்பூர்வமற்ற காட்டுப் பாதைகள் மற்றும் ரகசிய வழிகளைப் பயன்படுத்தி எல்லை தாண்ட முயல்வார்கள் என்றும், அது நோய்த்தொற்றைக் கண்காணிப்பதைக் கடினமாக்கிப் பரவலை மேலும் அதிகரிக்கும் என்றும் WHO எச்சரித்துள்ளது. எனினும், அவசர மருத்துவக் குழுக்கள், ஐநா பாதுகாப்புப் படைகள் மற்றும் அத்தியாவசிய உணவுச் சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே அடுத்த 4 வாரங்களுக்கு இந்த எல்லையில் விதிவிலக்கு அளிக்கப்படும் என்று உகாண்டா சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

காங்கோவின் இதூரி (Ituri) மாகாணத்தில் நிலவி வரும் உள்நாட்டு ஆயுதக் குழுக்களின் மோதல்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வு போன்ற சவால்களால், அங்கு எபோலா பரவலைக் கட்டுப்படுத்துவது சுகாதார அமைப்புகளுக்குப் பெரும் திண்டாட்டமாக மாறியுள்ளது. உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவிலும் தற்போது 7 எபோலா வழக்குகள் பதிவாகியுள்ளதால், உகாண்டா சுகாதாரத்துறை அங்கு பொது மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கவும், கைகுலுக்குவதைக் கைவிட்டு சானிடைசர்களைத் தொடர்ந்து பயன்படுத்தவும் அவசர அறிவுறுத்தல் விடுத்து, நாட்டின் எல்லைப் பகுதிகள் முழுவதையும் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது.