பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள அரசு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில், 3 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கொடூரமான முறையில் வன்கொடுமைக்கும், உடல் ரீதியிலான வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதிய உணவு இடைவேளை, தூங்கும் நேரம் மற்றும் பள்ளிக்கு பிந்தைய சிறப்பு வகுப்புகளின் (After-school programmes) போது குழந்தைகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த தற்காலிகப் பணியாளர்களே (Monitors) இந்த அநீதிகளில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ் தேசத்தையே உலுக்கியுள்ள இந்த மாபெரும் சிறார் வன்கொடுமை விவகாரம், உலகெங்கும் உள்ள பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூர விவகாரம் தொடர்பாகப் பாரிஸ் நகரின் தலைமை அரசு வழக்கறிஞர் லாரே பெக்குவாவ் (Laure Beccuau) வெளியிட்டுள்ள அதிரடித் தகவல் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பாரிஸ் நகரில் மட்டும் தற்போது 84 மழலையர் பள்ளிகள் (Preschools), 20 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 10 குழந்தை காப்பகங்கள் என 100-க்கும் மேற்பட்ட கல்விக்கூடங்களைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் மீது புகார்கள் குவிந்துள்ளன. பாதிக்கப்பட்ட 3 மற்றும் 4 வயதுக் குழந்தைகளின் பெற்றோர்கள் திரண்டு அளித்த புகார்களின் அடிப்படையில், 100-க்கும் மேற்பட்ட பள்ளி உதவியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் மீது பாலியல் வன்கொடுமை, பலாத்காரம் மற்றும் கடுமையான உடல் ரீதியிலான சித்திரவதை ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பள்ளிகளில் குழந்தைகள் கொடூரமாகக் கத்தப்படுவது, தலைமுடியைப் பிடித்து இழுப்பது, உணவை மறுப்பது, வாந்தி எடுக்கும் வரை கட்டாயப்படுத்தி உணவை ஊட்டுவது மற்றும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது போன்ற கொடூரங்கள் பல ஆண்டுகளாக அங்கே அரங்கேறி வந்துள்ளன. ‘எஸ்ஓஎஸ் பெரிஸ்கோலைர்’ (SOS Périscolaire) மற்றும் ‘#MeTooEcole’ போன்ற பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் கூட்டமைப்புகள், இந்த அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்த பிறகே தற்போது பிரான்ஸ் அரசு விழித்துக் கொண்டுள்ளது . இந்த விவகாரத்தின் தீவிரத்தை அடுத்து, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான குறுகிய காலத்திற்குள் மட்டும் பாரிஸ் மாநகராட்சியால் 78 பள்ளி உதவியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்; இதில் 31 பேர் தீவிர பாலியல் அத்துமீறல் புகாருக்குள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகளில் நிலவும் இந்த உள்கட்டமைப்புச் சீர்கேட்டைப் பிரான்ஸ் நாட்டின் தேசியப் பேரிடர் என்று வழக்கறிஞர்கள் சாடியுள்ளனர். சிறுவயதில் தாமும் இது போன்றதொரு பள்ளி நேரப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாகப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ள பாரிஸின் புதிய மேயர் இம்மானுவேல் கிரகோயர் (Emmanuel Grégoire), இந்தச் சீர்கேடுகளைக் களைய 20 மில்லியன் யூரோ மதிப்பிலான அவசரச் செயல்திட்டத்தை அறிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் பள்ளி உதவியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் குற்றப் பின்னணியை மிகத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பிரான்ஸ் நாடெங்கும் தற்போது வலுத்துள்ளது.