இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் (Southampton) நகரில், 18 வயது கல்லூரி மாணவர் ஹென்றி நோவாக் (Henry Nowak) கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அங்குப் பொதுமக்களுக்கும் கலவரத் தடுப்பு போலீசாருக்கும் (Riot Police) இடையே நள்ளிரவில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு காவல்துறையின் துரோகம் மற்றும் அலட்சியம் அம்பலமானதால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கிப் போராடியுள்ளனர். இந்த வன்முறை மோதலின் போது போலீஸ் அதிகாரிகள் மீது செங்கற்கள், பாட்டில்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளை வீசி எறிந்த போராட்டக்காரர்களில் இருவரைப் பிரிட்டிஷ் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்தக் கலவரத்திற்கான பின்னணி ஒட்டுமொத்த பிரிட்டனையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கால்பந்து விளையாடிவிட்டுத் திரும்பிய மாணவர் ஹென்றியை, விக்ரம் திக்வா (Vickrum Digwa) என்ற 23 வயது சீக்கிய வாலிபர் 21 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியால் கொடூரமாக 5 முறை குத்திக் கொலை செய்தார். இந்த வழக்கில் திக்வாவிற்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ஆனால், நீதிமன்ற விசாரணையின் போது காவல்துறையினரின் உடல் கேமரா (Bodycam) காட்சிகள் வெளியானதே தற்போதைய மக்கள் எழுச்சிக்குக் காரணமாக மாறியுள்ளது. கத்திக்குத்துப்பட்டு உயிருக்குத் போராடிக் கொண்டிருந்த ஹென்றி, தம்மைக் காப்பாற்றுமாறு கத்தியபோது, கொலையாளி திக்வா சொன்ன பொய்களை நம்பிய போலீசார், உயிருக்குப் போராடிய மாணவருக்கு முதலுதவி செய்யாமல், அவரைத் தலைகீழாகக் கிடத்திக் கைகளில் விலங்கு (Handcuff) மாட்டியுள்ளனர்.
“என்னால் மூச்சுவிட முடியவில்லை” (I can’t breathe) என்று ஹென்றி கதறியபோதும், “நீ ஒன்றும் கத்திக்குத்துப்படவில்லை, சும்மா நடிக்காதே” என்று ஒரு போலீஸ் அதிகாரி அலட்சியமாகப் பேசியதும், அடுத்த சில நிமிடங்களில் ஹென்றி அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, பிரிட்டிஷ் காவல்துறை ‘வெள்ளையின மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வலதுசாரி அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சவுதாம்ப்டன் மத்திய காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கொலையாளியின் குடும்பம் வசிக்கும் பகுதி நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களைப் போலீஸ் படை தடுத்த போதுதான் வன்முறை வெடித்தது.
போராட்டக்காரர்கள் அங்கிருந்த தோட்ட வேலிகளை உடைத்து, எரியும் குப்பைத் தொட்டிகளையும் செங்கற்களையும் போலீஸ் வாகனங்கள் மீது வீசி எறிந்தனர். நிலைமை கைமீறிப் போனதால், போலீசார் பெப்பர் ஸ்பிரே மற்றும் தடுப்புக் கேடயங்களைப் (Riot Shields) பயன்படுத்தி கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். இந்த சம்பவம் குறித்துப் பேசிய பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், “இறக்கும் தருவாயில் ஒரு மாணவர் விலங்கிடப்பட்ட வீடியோவை பார்த்த போது எனக்குக் குமட்டல் ஏற்பட்டது” என்று கவலை தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்தத் துயரச் சம்பவத்தைச் சதித் திட்டங்களுக்குப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரிட்டன் உள்்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.