Posted in

விரைவில் அரசியல் அறிவிப்பா? – கோவையில் தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ் நற்பணி மன்றம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்குத் தயாராகி வருகிறாரா என்ற புதிய விவாதத்தை உருவாக்கும் வகையில், கோவையில் தொகுதி வாரியாக புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளை அகில இந்தியத் தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் தீவிரப்படுத்தியுள்ளது. கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கிளை நற்பணி மன்றங்களைத் தொடங்கி உறுப்பினர்களை உடனடியாக இணையுமாறு தலைமை மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

நடிகர் தனுஷின் நற்பணி மன்றத்தின் அகில இந்தியச் செயலாளர் பி. ராஜா மற்றும் தலைவர் சுப்ரமணியம் சிவா ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை மாவட்டப் பொறுப்பாளர் ஜி. சங்கர் தலைமையின் கீழ், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நற்பணி மன்றக் கிளைகளை அமைத்து, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு ரசிகர்களுக்கும் நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் பேசிய தனுஷ், நற்பணி மன்றங்கள் வெறும் ஆடியோ வெளியீட்டு விழாக்களுடன் நின்றுவிடாமல், மக்கள் தேவைகளை அறிந்து நேரடியாக உதவிகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். மேலும் நற்பணி மன்றத்திற்கென புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது தேர்தல் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டு வருவது, அவர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான முதற்கட்டப் பணிகளோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இருப்பினும், நடிகர் தனுஷ் தரப்பிலிருந்தோ அல்லது நற்பணி மன்றத்தின் உயர்மட்ட தலைமையிலிருந்தோ கட்சி தொடங்குவது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. சமூக நலப் பணிகளை அடிமட்ட அளவில் கொண்டு சேர்க்கவே இந்த அமைப்புச் சீரமைப்பு நடத்தப்படுவதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், தமிழகத்தில் சினிமா நட்சத்திரங்கள் நற்பணி மன்றங்கள் மூலம் அரசியல் களம் காண்பது வழக்கமான ஒன்று என்பதால் அரசியல் வட்டாரத்தில் தனுஷின் இந்த நகர்வு உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.