Posted in

CM மேல புகார் கொடுத்தா சம்மன் அனுப்புவீங்களா? – மகளிர் ஆணையத்தில் வெடித்த முன்னாள் அமைச்சர் கருக்கலைப்பு வழக்கு!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை (IT) அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த டாக்டர் எம். மணிகண்டன். அவருக்கும், ‘நாடோடிகள்’ படத் துணை நடிகை சாந்தினிக்கும் இடையே ஏற்பட்ட 5 ஆண்டுகாலப் பழக்கம், பின்னர் கட்டாயக் கருக்கலைப்பு, ஏமாற்றுதல் மற்றும் கொலை மிரட்டல் புகாராக உருவெடுத்துத் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் மணிகண்டன் முன்பு கைது செய்யப்பட்டு சிறை சென்ற நிலையில், அண்மையில் இறுதி விசாரணையின் போது திடீரென நடிகை தனது புகாரை வாபஸ் பெற்றார். ஆனால் தற்பொழுது, முன்னாள் அமைச்சர் தன்னை மீண்டும் ஏமாற்றிவிட்டதாகக் கூறி நடிகை சாந்தினி மகளிர் ஆணையத்தை நாடியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்ற போது மணிகண்டன் நேரில் வந்து சமரசம் பேசியதாக நடிகை சாந்தினி குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு அதிமுகவில் மாநிலங்களவை எம்பி (Rajya Sabha MP) சீட் கிடைக்கப் போவதாகவும், தான் எம்பியானதும் அவரது வாழ்வாதாரத்திற்குத் தேவையான வசதிகள் மற்றும் சொத்துக்களைச் செய்து தருவதாகவும் மணிகண்டன் அளித்த வாக்குறுதியை நம்பியே 2022-இல் வழக்கை வாபஸ் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மணிகண்டனுக்கு எம்பி சீட் கிடைக்காத நிலையில், வழக்கை வாபஸ் பெற்ற இரண்டே நாட்களில் அவரது அனைத்து எண்களும் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டு, தன்னை முற்றிலும் ஏமாற்றிவிட்டதாகக் கண்ணீர்மல்க நடிகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், நடிகை சாந்தினி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் மீண்டும் இந்தப் புகாரைத் தூசி தட்டியுள்ளார். இந்த மனுவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு மகளிர் ஆணையம் இருமுறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து விசாரணைக்கு வந்த மணிகண்டனின் வழக்கறிஞர்கள், வழக்கை ஏற்கனவே வாபஸ் பெற்றுவிட்டதால் மீண்டும் விசாரிக்கக் கூடாது எனக் கூறி மகளிர் ஆணையத் தலைவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் குதித்துள்ளனர். இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.

ஆணைய விசாரணையின் போது மணிகண்டன் தரப்பு வழக்கறிஞர்கள், “முன்னாள் அமைச்சரான மணிகண்டனுக்கு எப்படி சம்மன் அனுப்பலாம்? நாளைக்கு முதலமைச்சர் (CM) மீது யாராவது ஒரு பெண் இதுபோல புகார் கொடுத்தால் அவருக்கும் உடனடியாக சம்மன் அனுப்பிவிடுவீர்களா?” என்று கேட்டுப் பெண் அதிகாரிகளையே மிரட்டும் தொனியில் பேசியதாக நடிகை பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது தரப்பு வழக்கறிஞர்கள் 8 பேரை மணிகண்டன் தரப்பு விலைக்கு வாங்கிவிட்டதால் தானே நேரில் வாதாடியதாகக் கூறியுள்ள சாந்தினி, 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னைத் துரத்தும் இந்த அதிகார ஆணவப் பிடியில் இருந்து தமக்கு அரசுதான் உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.