தமிழகச் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் (2026–27), முதலமைச்சர் விஜய் தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதியான “அனைத்து வகை அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம்” திட்டம் அறிவிக்கப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே நகரப் பேருந்துகளில் மட்டும் நடைமுறையிலுள்ள இந்தச் சலுகையை, விரைவுப் பேருந்துகள் மற்றும் வெளியூர்ப் பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்யும் திட்டம் குறித்து அரசுத் தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ‘விடியல் பயணம்’ என்ற பெயரில் நகரக் சாதாரணப் பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதனை ‘வெற்றிப் பயணம்’ எனப் பெயர் மாற்றம் செய்த தவெக அரசு, தேர்தல் பிரச்சாரத்தின் போது “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி, அனைத்து விதமான அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்திருந்தது.
இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினால், ஆண்டுதோறும் போக்குவரத்துக் கழகங்களுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என்பதால், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வருவாய் வழிகள் குறித்துப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் பல கட்ட ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார். பெண்களின் பாதுகாப்பான பயணம் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில், பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சிறப்பு நிதி ஒதுக்கீடும் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் என். மரிய வில்சன், மகளிருக்கான மாத உதவித்தொகை ரூ.2,500 வழங்கும் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ மற்றும் இலவசப் பேருந்து பயண விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத் தலைவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளின் அன்றாடப் பயணச் செலவைக் கணிசமாகக் குறைக்கும் இந்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறுமா என்பதை அறியத் தமிழக மக்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.