Posted in

 வரலாற்றை தொட முடியாது; தவெக அரசுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை!

திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களின் பெயர்களை மாற்றுவதற்குத் தற்போதைய தவெக அரசு முயன்று வருவதாகக் கூறி, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “போலியான ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து, அதன் மூலம் வரலாற்றை துளிகூட உங்களால் மாற்றிவிட முடியாது. திட்டங்களின் பெயர்களை வேண்டுமானால் உங்களால் அழிக்க முடியும், ஆனால் அதன் பின்னால் இருக்கும் உண்மையான வரலாற்றைத் தொடக்கூட முடியாது” என்று அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் தவெக அரசுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் உருவான பின்னணியை அன்பில் மகேஷ் தனது பதிவில் நினைவுகூர்ந்துள்ளார். இத்திட்டத்தைத் தொடங்கும் முன்பு, இதற்காக ஐந்து விதமான பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி ஒப்புதலுக்காக அப்போதைய முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டன என்றும், ஆனால் அந்தப் பட்டியலில் ‘நான் முதல்வன்’ என்ற பெயர் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திட்டத்தின் முழு வடிவமைப்பையும் பொறுமையாகக் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், “ஒவ்வொரு மாணவனும், இளைஞனும் தான் தேர்ந்தெடுக்கும் துறையில் முதலிடத்தை அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்; எனவே ‘நான் முதல்வன்’ என்று பெயரிடலாம்” எனத் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்தார் என்று அன்பில் மகேஷ் விவரித்துள்ளார்.

அதேபோல், அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்காகக் கொண்டு வரப்பட்ட “புதுமைப்பெண் திட்டம்” என்ற பெயர், ஒரு கல்லூரி நிகழ்வில் அப்போதைய முதலமைச்சர் முன்னிலையில் மாணவிகளாலேயே ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சூட்டப்பட்ட பெயர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “இத்தகைய உணர்வுகளும், தொலைநோக்குச் சிந்தனைகளும் வெறும் ‘முதலமைச்சராக வேண்டும்’ என்ற ஒரே ஒரு நோக்கத்தோடு (Agenda) மட்டுமே அரசியலுக்கு வந்தவர்களுக்கு நிச்சயமாகத் தெரியப் போவதில்லை, தெரிந்தாலும் அவர்கள் அதை உணரப் போவதில்லை” என்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மறைமுகமாகத் தாக்கி அன்பில் மகேஷ் விமர்சித்துள்ளார்.

திமுக அரசின் திட்டங்கள் மக்களுக்குப் புரியவில்லை என்கிற ரீதியில் மட்டம் தட்டிப் பேசி, தவெக ஆட்சியாளர்கள் திட்டங்களின் பெயர்களை மாற்றுவதற்கான கதைகளை அவிழ்த்து விடுவார்கள் என்றும், அதை நம்புவதற்கு நாமும் தயாராக இருப்போம் என்றும் அவர் சாடியுள்ளார். இறுதியாக, “எங்கள் ஆட்சிக்கால திட்டங்களின் பெயர்களை மாற்றுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்; ஆனால், மாணவர்களுக்கான உன்னதமான திட்டங்களைத் தொட நினைத்தால் அல்லது அதில் கை வைக்க முயன்றால், தவெக அரசுக்கு எதிராக ஜனநாயக முறையில் மிகக் கடுமையான எதிர்ப்பைக் காட்ட நாங்கள் தயாராவோம்” என்று அன்பில் மகேஷ் வார்னிங் கொடுத்துள்ளார்.