தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை, பாஜகவிலிருந்து விலகிய பின் ‘வி த லீடர்ஸ்’ (We The Leaders) என்ற புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கி அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த இயக்கத்தைத் தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் தளத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்கம் தொடங்கப்பட்ட ஆரம்பக் கட்டத்தில் ஆன்லைன் வழியிலான இணையதளப் பதிவு மூலம் சுமார் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கிராமப்புறங்கள் மற்றும் அடித்தட்டு மக்களிடையே இணையவழிப் பதிவு சென்றடைவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், கடந்த இரண்டு மாதங்களாக உறுப்பினர் சேர்க்கையின் வேகம் வெகுவாகக் குறைந்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட டார்கெட்டில் பாதியைக் கூட இன்னும் தாண்ட முடியவில்லை என்பது ஒருங்கிணைப்பாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் முறையிலான இணையதளப் பதிவு மட்டுமே போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த அண்ணாமலை, தற்போது தனது உத்தியை மாற்றி யோசிக்கத் தொடங்கியுள்ளார். இணைய வசதி இல்லாத பாமர மக்களையும், மூத்த குடிமக்களையும் எளிதாகச் சென்றடையும் வகையில், பாஜகவில் பின்பற்றப்பட்ட ‘மிஸ்டு கால்’ (Missed Call) சேவை முறையை மீண்டும் கையில் எடுக்க அவர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் ஒரே தொலைபேசி அழைப்பு மூலம் உறுப்பினர் சேர்க்கையை எளிமையாக்கி, தமிழகத்தின் கிராமப்புறப் பகுதிகளிலும் இயக்கத்தின் பலத்தைப் பெருக்கத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் இதற்கான பிரத்யேகத் தொலைபேசி எண்களை அறிவித்து, களப்பணிகளை முடுக்கிவிட அண்ணாமலை தரப்புத் திட்டமிட்டுள்ளது.