Posted in

3.23 கோடியில் போடப்பட்ட சாலையைக் காணவில்லை! அரப்போர் இயக்கத்தின் பகீர் புகார்; திரைப்பட பணியில் நடந்த உழல்

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து கரூரில் பல கோடி ரூபாய் அரசுப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தற்பொழுது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து அதிரடி சோதனையில் இறங்கியுள்ளது. ஊழலுக்கு எதிரான ‘அரப்போர் இயக்கம்’ அளித்த அடுக்கடுக்கான ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதுகுறித்து அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெளியிட்டுள்ள தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளன.

கடந்த 2022 மார்ச் மாத காலகட்டத்தில், கரூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகச் சுமார் 7 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ‘சங்கரானந்த் இன்ஃப்ரா’ (Sankaranand Infra) என்ற நிறுவனத்திற்கு அவசர அவசரமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், கரூரில் போடப்பட்ட மொத்த 31 டெண்டர்களில், விதிமுறைகளுக்குப் புறம்பாக 20 டெண்டர்கள் இந்த ஒரே நிறுவனத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதைவிடக் கொடுமையாக, அந்தப் பகுதிகளில் ஒரு ஜல்லிக்கல் கூடக் கொட்டிச் சாலையே போடாத நிலையில், மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் 3.23 கோடிப் பணம் அந்த ஒப்பந்ததாரரின் வங்கி கணக்கிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பணத்தைப் பறிமாற்றம் செய்வதற்கு முன்பாக, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அனைவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, ‘எம்-புக்’ (M-Book) எனப்படும் அளவீட்டுப் புத்தகத்தில் “சாலைகள் அனைத்தும் தரமாகப் போடப்பட்டுப் பணிகள் முடிவடைந்துவிட்டன” என்று போலிக் கணக்கு எழுதிப் பச்சைப்பொய் சான்றளித்துள்ளனர். இந்த இமாலய ஊழல் விவகாரம் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியில் கசிந்த உடனே, அப்போதைய அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து, தங்களது குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை அழிக்க முற்பட்டுள்ளனர். இதற்காகக் கரூர் ஈசனத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பந்தோபஸ்துடன் அவசர அவசரமாகப் புதிய சாலைகளை அமைத்து தங்களது தவற்றை மூட முற்பட்டதாக அரப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த ஊழல் அம்பலமான போது சில கீழ்மட்ட பொறியாளர்களை மட்டும் தற்காலிகப் பணிநீக்கம் (Suspension) செய்துவிட்டு, மிக பவர்ஃபுல்லான மற்றும் திமுகவின் முக்கியப் புள்ளிகளுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சங்கரானந்தை அதிகாரிகள் தப்ப வைத்துள்ளனர். தற்பொழுது மாநிலத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை முதல் குற்றவாளியாகவும் (A1), ஒப்பந்ததாரர் மற்றும் 10 அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது கூட்டுச் சதி, ஏமாற்றுதல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை முறைப்படி வழக்குப் பதிவு செய்து, சென்னை, திருவண்ணாமலை மற்றும் கரூர் உட்பட 14-க்கும் மேற்பட்ட இடங்களில் விடிய விடியச் சோதனையை நடத்தியுள்ளது.