Posted in

உலக அழிவில் இருந்து தப்பிக்க சிறந்த நாடு இதுதான்! – புதிய ஆய்வில் வெளியான தகவல்கள்!

உலகளாவிய பேரழிவு, அணுஆயுதப் போர், அல்லது பயங்கர நோய்த்தொற்று போன்ற பேரழிவு (Apocalypse) மனிதகுலத்தைத் தாக்கும் போது, உலகின் எந்த நாட்டில் மனிதர்கள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம், எந்த நாடு மிகவும் ஆபத்தானது என்பது குறித்த புதிய அறிவியல் ஆய்வு முடிவுகள் வெளியாகிப் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. ஜெர்மனியின் ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானி புளோரியன் உல்ரிச் ஜெஹ்ன் (Florian Ulrich Jehn) தலைமையிலான குழுவினர் நடத்திய இந்த ஆய்வில், உலகளவில் உயிர் பிழைக்கச் சிறந்த இடமாக ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியா ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தீவு நாடாகவும், தனக்குத் தேவையானதை விட அதிகமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகவும், தாதுக்கள் மற்றும் எரிசக்தி வளங்கள் நிறைந்ததாகவும் இருப்பதால் பேரழிவு காலங்களில் எல்லையை எளிதில் மூடித் தற்காத்துக் கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து டாஸ்மேனியா தீவு, நியூசிலாந்து, அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ஆகிய தெற்கு அரைக்கோள நாடுகள் அதிகப் பாதுகாப்பு நிலவரத்தைக் கொண்ட நாடுகளாகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

அதேநேரத்தில், பேரழிவின் போது உயிர் பிழைப்பதற்கு மிகவும் ஆபத்தான மற்றும் மோசமான இடமாக ரஷ்யா பட்டியலிடப்பட்டுள்ளது. வட அரைக்கோளத்தில் அமைந்திருப்பதால் அணுஆயுதப் போரின் போது ஏற்படும் ‘அணுக்கால குளிர்காலம்’ (Nuclear Winter) ரஷ்யாவை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்பதோடு, முதன்மை அணுஆயுத இலக்காக இருப்பதும், பலவீனமான நிர்வாகம், ஊழல் மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவை இதற்குக் காரணங்களாக அடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அணுஆயுத அச்சுறுத்தல் காரணமாகப் பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையிலேயே வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த ஆய்வின் இறுதியில் ஆய்வாளர்கள் ஒரு பயங்கரமான எச்சரிக்கையையும் அளித்துள்ளனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் முதலிடத்தில் இருந்தாலும், அவை எரிபொருள், மருந்துகள் மற்றும் உரங்கள் இறக்குமதிக்குச் சர்வதேச வர்த்தகத்தையே நம்பியுள்ளன. இதனால் உலகளாவிய விநியோகச் சங்கிலி உடைந்தால் எந்த ஒரு நாடும் தப்ப முடியாது எனக் குறிப்பிட்டுள்ள ஆய்வுக்குழு, “உலக அழிவிலிருந்து தப்பித்து ஒளிந்து கொள்ள பூமியில் உண்மையிலேயே பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை” (There is truly no place to hide) என்ற அதிர வைக்கும் உண்மையைப் பதிவு செய்துள்ளது.