9/11 பயங்கரவாதத் தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் கொரோனா பெருந்தொற்று உட்பட உலகின் பல முக்கிய மாற்றங்களை முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படும் பல்கேரியாவின் கண் பார்வையற்ற பெண் தீர்க்கதரிசி பாபா வங்காவின், 2027-ஆம் ஆண்டிற்கான முதல் கணிப்பு வெளியாகி சர்வதேச அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபா வங்காவின் ஆதரவாளர்கள் மற்றும் பின்பற்றுபவர்களால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அந்த அதிர்ச்சி கணிப்பில், 2027-ஆம் ஆண்டில் பரவக்கூடும் ஒரு விசித்திரமான நோய் அல்லது மனித மரபணு சார்ந்த சோதனைகள் (Genetic Experiments) காரணமாக மனித குலத்தில் சிலருக்குச் ‘சூப்பர்மேன்’ போன்ற சூப்பர் பவர் ஆற்றல்கள் (Superhuman Powers) கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அறிவியல் புனைகதை திரைப்படங்களின் கதையை நினைவூட்டும் இக்கணிப்பின்படி, அந்த நோய் அல்லது மரபணு சோதனை உலகளவில் பெருமளவிலான மக்களைப் பாதித்தாலும், அதில் ஒருசிலருக்கு மட்டுமே அசாதாரண சக்திகளும் விசித்திர ஆற்றல்களும் பிறக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த சூப்பர் பவர் ஆற்றல்கள் என்னென்னவாக இருக்கும் என்பது பற்றிய தெளிவான விவரங்கள் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை.
கடந்த 1996-ஆம் ஆண்டு மரணமடைந்த பாபா வங்கா, தனது கணிப்புகளை எழுத்துப்பூர்வமாக எழுதி வைக்காததால், அவரது ஆதரவாளர்களால் காலம் தோறும் பரப்பப்படும் இத்தகைய தகவல்களைப் பகுத்தறிவாளர்களும் அறிவியலாளர்களும் வெறும் கட்டுக்கதை என்றும் அம்புலிமாமா கதைகள் என்றும் புறந்தள்ளி வருகின்றனர். எனினும், சமூக வலைத்தளங்களில் 2027-ஆம் ஆண்டிற்கான இக்கணிப்பு உலக பயனர்களிடையே மிக வேகமாகப் பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.